புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காகப் பரிசுகளை ஏற்கக் கூடாது மற்றும் நிதி ஏற்பாடுகளைச் செய்யக் கூடாது என்பது தொடர்பாக பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்குமான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் – சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவதற்காகப் பல பொலிஸ் நிலையங்கள் அதிகாரிகளிடமிருந்து பணம் வசூலிக்கத் தயாராகி வருவதாகவும், வணிகர் சமூகத்தினரின் பங்கேற்புடன் புத்தாண்டு விழாக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக நல்லெண்ணத்தின் அடிப்படையில் கெளரவிக்கும் விதமாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பிரத்யேகமாக வழங்கப்படும் பரிசுப் பொருட்கள் அல்லது பரிசுச் சீட்டுகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், வெளித் தரப்பினர் அல்லது வணிக சமூகத்தின் நிதியுதவி அல்லது ஆதரவுடன் பொலிஸ் நிலையங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்தப்படக் கூடாது என்றும் அந்த அறிவுறுத்தல்கள் குறிப்பிடுகின்றன.
பொலிஸ் நிலையங்களில் நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்காக, பொலிஸ் நல நிதியிலிருந்து ஒவ்வொரு பொலிஸாருக்கும் 250 ரூபா வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல்களை மீறிச் செயல்படும் எந்தவொரு அதிகாரி மீதும் மேற்பார்வை அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொலிஸ்மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களின் மொத்தம் 17 பொறுப்பு அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ்துறையில் தற்போதுள்ள வெற்றிடங்களுக்கு ஏற்ப இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.