இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் இன்று வியாழக்கிழமை (02) அதிகாலை 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பிராந்தியத்தின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மொலுக்கா கடற்பரப்பில், டெர்னேட் நகருக்கு அருகில் சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

ஆரம்பத்தில் நிலநடுக்கத்தின் அளவு அதிகமாக மதிப்பிடப்பட்ட போதிலும், பின்னர் அது 7.4 ரிக்டர் என உறுதிப்படுத்தப்பட்டது.

பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் அபாயகரமான அலைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலோரப் பகுதிகளில் 0.3 மீற்றர் முதல் 01 மீற்றர் வரையிலான உயரத்திற்கு சுனாமி அலைகள் எழக்கூடும் என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், பாதிக்கப்படக்கூடிய கடலோரப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் உயிரிழப்புகள் அல்லது பாரிய சேதங்கள் குறித்து உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இருப்பினும், சேத விபரங்கள் குறித்த மதிப்பீடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பின்னதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பசிபிக் நெருப்பு வலைய (Pacific Ring of Fire) பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியா, உலகின் நில அதிர்வு மற்றும் எரிமலை செயற்பாடுகள் அதிகம் நிகழும் பிராந்தியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கோ அல்லது ஒட்டுமொத்த இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கோ தற்போதைய நிலையில் எந்தவிதமான சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts