அல்லைப்பிட்டியில் நிறுத்தாமல் சென்ற வேன் மீது சூடு – 17 வயது சாரதி பலி

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிச் செல்ல முயன்ற சந்தேகத்துக்கிடமான வேன் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை, ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டிய போதிலும், குறித்த வேன் பொலிஸாரின் கட்டளையை மீறி மண்டைதீவு நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மண்டைதீவு வீதித் தடையை பரிசோதித்துவிட்டு அல்லைப்பிட்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஜீப் வண்டிக்கு சம்பவம் தொடர்பான தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பொலிஸார் குறித்த வேனை நிறுத்த முயற்சித்தபோதும், அது தொடர்ந்தும் தப்பிச் செல்ல முயன்றதால், முதலில் வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எச்சரிக்கை துப்பாக்கிச் சூட்டையும் பொருட்படுத்தாமல் வேன் தொடர்ந்தும் தப்பிச் சென்றதால், வேனை நிறுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வேனின் சாரதி காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாரதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும், குறித்த வேனின் பின்புற இருக்கைகள் கழற்றி அகற்றப்பட்டிருந்ததாகவும், வேனில் இருந்த மேலும் இருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸாரும் யாழ்ப்பாண பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினரும் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts