சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக யாழ்ப்பாண சுற்றுலா சபையினால் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலில் நேற்று (15) பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.

இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஒரு தனித்துவமான இடமாக யாழ்ப்பாண மாவட்டம் தற்போது அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் பல்வேறு தமிழ் கலாசார நிகழ்வுகளுடன் சுற்றுலா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழா வர்ணமயமாக அமைந்தது.
இங்கு உரையாற்றிய கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிடுகையில்,
பொங்கலுக்கு முந்தைய மாதங்களில் நாம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டோம். டித்வா புயலினால் பொருளாதார ரீதியில் நாட்டுக்கு பாரிய சேதம் ஏற்பட்டது. நாம் தனித்தனியாக அன்றி முழு நாடும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பத் தயார் என்ற செய்தியை டித்வா புயலின் ஊடாக நாட்டு மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை பிறந்த இந்த நாட்டுக்கு வழி பிறப்பதை தடுக்க சில அரசியல்வாதிகளினால் எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. நாட்டை கட்டியெழுப்ப தமிழ்,சிங்கள.முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக காலம் கனிந்துள்ள நிலையிலே மானிப்பாயில் இந்த பொங்கல் நிகழ்வு நடைபெறுகிறது” என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா உள்ளிட்ட பாதுகாப்புப் படைத் தலைவர்களும், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.