இலங்கையின் வான்பரப்பில் காற்றின் தரம் தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது

இந்தியாவின் திசையிலிருந்து வரும் மாசடைந்த காற்று மற்றும் உள்நாட்டு வளிமண்டல நிலைமைகளால் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணம், சிலாபம், புத்தளம், காலி, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரம் கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
குறிப்பாக வடமாகாணத்தின் சில பகுதிகளில் சுவாசத்திற்கு ஒவ்வாத நச்சுத்தன்மை கொண்ட நுண்துகள்கள் காற்றில் கலந்துள்ளதாக அண்மைக்கால தரவுகள் காட்டுகின்றன.
இது குறித்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், “இந்தியாவில் நிலவும் கடும் காற்று மாசுபாடு காரணமாக, அங்கிருந்து மாசடைந்த காற்று இலங்கையை நோக்கி நகர்கிறது.அதனுடன் உள்நாட்டு புகை மாசும் இணைந்துகொண்டுள்ளது. தற்போதைய வளிமண்டல அழுத்த நிலைமைகள் காரணமாக, இந்த மாசுக்கள் வெளியேற முடியாமல் வளிமண்டலத்தின் கீழ்ப்பகுதியிலேயே தங்கியுள்ளன,” எனத் தெரிவித்தார்.
இந்த நிலைமை எதிர்வரும் 2026 மார்ச் மாதம் வரை நீடிக்கக்கூடும் என்றும், தட்பவெப்ப மாற்றங்களுக்கு ஏற்ப அவ்வப்போது நிலைமையில் முன்னேற்றம் ஏற்படலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நேற்றைய நிலவரப்படி (டிசம்பர் 30), இந்தியாவின் முக்கிய நகரங்களில் காற்றின் தரக் குறியீடு (AQI) 200-ஐத் தாண்டியுள்ளது. இது உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலை விட 11 மடங்கு அதிகமான பாதிப்பாகும். அங்கிருந்து வீசும் காற்றே இலங்கையின் வான்பரப்பையும் பாதித்து வருகிறது.
காற்றின் தரம் குறைந்துள்ளதால் பொதுமக்கள், குறிப்பாக சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் சுவாசப் பாதிப்பு உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெளியில் செல்லும்போது தரமான முகக்கவசங்களை அணிதல், திறந்தவெளிகளில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்த்தல், வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை இயன்றவரை மூடி வைத்தல் போன்றவற்றை மேற்கொள்ளுமாறும், சுவாசக் கோளாறுகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மேலதிக கண்காணிப்புகளை மேற்கொண்டு வருவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.