தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது – வட இலங்கையின் சங்க நாயக்க தேரர்

‘ராஜமகா விகாரை’ என பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்தி, இராணுவத்தின் பங்களிப்புடன் காங்கேசன்துறை தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரை போலியானது என வடக்கின் பிரதம சங்க நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள காணியின் உண்மையான உரிமையாளர்கள் அப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களே என்பதை ஏற்றுக்கொண்ட வட மாகாண பிரதம சங்கநாயக்க தேரர், அந்த உரிமையை உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதி தலையிடாவிட்டால், இனங்களுக்கு இடையில் மோதல்கள் வெடிக்கும் அபாயம் குறித்து எச்சரித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு உறுதிப்பத்திரம் உள்ள காணிகளை யுத்தத்தின் மூலம் கையகப்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரை, உண்மையான திஸ்ஸ விகாரை அல்ல என நாகதீப புராண ரஜமகா விகாராதிபதியும் வட இலங்கையின் பிரதம சங்கநாயக்க தேரருமான நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரர் கூறுகிறார்.

“உண்மையான திஸ்ஸ விகாரை தற்போது உள்ள போலியான திஸ்ஸ விகாரைக்கு அருகிலேயே அமைந்துள்ளது. அந்த திஸ்ஸ விகாரை நாகதீப விகாரைக்குச் சொந்தமானது. அதன் உரிமை நாகதீப விகாரையிடமே உள்ளது. ஆனால், இப்போது திஸ்ஸ விகாரை என அழைக்கப்படும் பகுதி காங்கேசன்துறை தையிட்டி பகுதியில் வசிக்கும் குடிமக்களுக்குச் சொந்தமானது. யுத்த காலத்தில் குடிமக்களின் காணிகளைக் கையகப்படுத்தி, சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்ட ஒரு இடத்தையே திஸ்ஸ விகாரை என்ற பெயரில் போலியான திஸ்ஸ விகாரையாக ஆரம்பித்துள்ளனர்.”

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வரும் தன்னைப்போன்று வேறு எந்த பௌத்தரும் இவ்விடயம் குறித்து அறிந்திருக்க மாட்டார்கள் என பதுமகித்தி திஸ்ஸ நாயக்க தேரர் ஒரு காணொளி உரையின் மூலம் தெரிவித்துள்ளார்.

இராணுவப் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம், காங்கேசன்துறை திஸ்ஸ ராஜமகா விகாரையின் விகாராதிபதி சத்தர்மகீர்த்தி சங்கைக்குரிய கிந்தோட்டை நந்தாராம தேரருக்கு, அமரபுர ஸ்ரீ கல்யாணவம்ச நிகாயவின் வட இலங்கையின் உப பிரதம சங்கநாயக்க பதவிக்கான ‘ஸ்ரீ சன்னஸ் பத்ர’ மற்றும் ‘விஜினி பத’ ஆகியவை புத்தசாசன, சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் தலைமையில் கொழும்பில் வழங்கி வைக்கப்பட்டதன் பின்னர், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“53 வருடங்களாக நான் இந்த நாகதீப விகாரையில் இப்பிரதேசத்தின் தமிழ் மக்களுடனேயே வாழ்ந்து வருகிறேன். இந்தப் பிரதேசத்தில் உள்ள எமது சகோதர மக்கள் அனைவரும் நாகதீப விகாரையின் தேரர் யார் என்பதை அறிவார்கள். நாம் இதுவரை காலமும் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழ்ந்து வந்தோம்.”

தற்போது வடபுலத்துக்கு வெளியே இருந்து வரும் தேரர்கள் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து விகாரைகளை நிர்மாணித்து வருவதை ஏற்றுக்கொண்ட வட இலங்கையின் பிரதம சங்கநாயக்க நவதகல பதுமகித்தி திஸ்ஸ நாயக்க தேரர், அந்த ‘செய்யத்தகாத வேலை’ தொடர்பில் பதற்றமடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

“தற்போது உண்மையில் தேரர்கள் வந்து தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து விகாரைகளை நிர்மாணித்து வருகின்றனர். எனவே, அதனை உண்மையில் செய்யத்தகாத ஒரு வேலையாகவே நாம் பார்க்கிறோம். அதனால் மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். இந்த இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் நிதானமாகச் செயற்பட வேண்டிய தேவை உள்ளது. எனவே, அரசாங்கம் இதில் தலையிட்டுச் செயற்பட்டால் நல்லது என்பதுதான் எனது கருத்தாகும்.”

உண்மையைக் கண்டறிந்து, திஸ்ஸ விகாரையின் காணிப் பிரச்சினையை சுமூகமான முறையில் கலந்துரையாடல் மூலம் தீர்த்துக் கொள்வது தொடர்பாக இதுவரையில் எந்தவொரு தேரரோ அல்லது அரசாங்கமோ நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் நாகதீப புராண ராஜமகா விகாராதிபதி நவதகல பதுமகித்தி திஸ்ஸ நாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.

“அதேபோன்றுதான், நாகதீப விகாரையின் தேரராகிய என்னுடன் இது தொடர்பாகக் கலந்துரையாடினால், ஒரு முடிவுக்கு வந்து இது ஒரு போலியான இடமா? அல்லது உண்மையான இடமா என்பதை எம்மால் நிரூபிக்க முடியும். அரசாங்கமோ அல்லது எமது தேரர்களோ ஒருபோதும் அவ்வாறு என்னுடன் தொடர்பு கொண்டு செயற்படவில்லை. எனவே, அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு ஒரு தீர்வை காண்பதே எனது அடிப்படை நோக்கமாக உள்ளது. அப்போதுதான் எமது மக்களுடனும், இங்கு வாழும் சகோதர தமிழ் மக்களுடனும் எம்மால் இலகுவாக வாழ முடியும்.”

திஸ்ஸ விகாரையின் காணிப் பிரச்சினையை துரிதமாகத் தீர்க்காவிட்டால், அது அப்பிரதேசத்திலுள்ள ஏனைய பௌத்த விகாரைகளிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் தேரர் எச்சரிக்கிறார்.

“இப்படியே போனால் இந்த விகாரையை முன்னிலைப்படுத்தி இப்பிரதேசத்தில் உள்ள ஏனைய தேரர்களுக்கும், அதேபோல் இப்பகுதியில் உள்ள விகாரைகளுக்கும் ஒருபோதும் நிம்மதியாக இருக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, இந்தப் பிரச்சினையை நாம் சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு அரசாங்கத் தரப்பினரையும்— எமது ஜனாதிபதி அவர்களிடம் நான் வேண்டிக்கொள்வது, ஜனாதிபதி அவர்கள் இதில் முன்னின்று நாகதீப விகாரையின் தேரரையும், அதேபோன்று தையிட்டி பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களையும், காணி உரிமையாளர்களையும் அவர்களது உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன் அழைத்து வரச் செய்ய வேண்டும். அவர்களால் அதனை நிரூபிக்க முடியும், எனக்கும் உண்மையான திஸ்ஸ விகாரை எங்குள்ளது என்பதை நிரூபிக்க முடியும்.”

இந்தக் காணிப் பிரச்சினை எதிர்காலத்தில் ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுப்பதற்கு முன்னதாக பேச்சுவார்த்தை மூலம் இதனைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேரர் இதன்போது மீண்டும் மீண்டும் ஜனாதிபதிக்கு அறிவுரை வழங்கியிருந்தார்.

“குறிப்பாக நான் ஜனாதிபதியிடம் மீண்டும் வேண்டிக்கொள்வது என்னவென்றால், இது குறித்து கலந்துரையாடித் தீர்வு காணுங்கள். இல்லையென்றால் எதிர்காலத்தில் இதைவிடப் பெரிய பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.”

திஸ்ஸ விகாரையில் தமிழ் மக்கள் உரிமை கோரும் காணியை அவர்களுக்கு விடுவித்துக் கொடுப்பதே விகாராதிபதிக்கு ஒரு உண்மையான கௌரவமாக அமையுமென, திஸ்ஸ விகாரையின் விகாராதிபதிக்கு அமரபுர ஸ்ரீ கல்யாணவம்ச நிகாயவின் வட இலங்கையின் உப பிரதம சங்கநாயக்க பதவிக்கான பட்டயப்பத்திரம் மற்றும் கைவிசிறி ஆகியவற்றை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட சங்கைக்குரிய பலபிட்டியே சிறி சீவலி தேரர் பௌத்த அலுவல்கள் அமைச்சரும் பங்கேற்ற அந்த நிகழ்வில் (2025 டிசம்பர் 21) உரையாற்றுகையில் வலியுறுத்தியுள்ளார்.

“மீண்டும் மாதத்துக்கொரு தடவை அதுபோன்ற காணொளிகள் வெளிவராத வகையில், திஸ்ஸ விகாரைப் பிரச்சினையை— எமது அமைச்சரும் இங்கே இருக்கிறார்— எம்மால் தீர்க்க முடிந்தால் மிகவும் நல்லது. எந்தவொரு பிரச்சினைக்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன. எனவே, எம்மால் அந்த இரு தரப்பினருடனும் பேசி, எமது விகாரைக்குத் தேவையான போதுமான காணியை வைத்துக்கொண்டு ஏனையவற்றை விட்டுக்கொடுக்கலாம். தானம் வழங்கல் என்பது எமது பௌத்த தத்துவத்தில் உள்ள ஒரு விடயமாகும். அவ்வாறு எம்மால் விட்டுக்கொடுக்கக்கூடிய பகுதி ஏதேனும் இருந்தால், அதைக் கோரும் அந்தத் தமிழ் மக்களுக்கு ஒப்படைத்துவிட்டு, இந்தப் பிரச்சினையை எம்மால் தீர்க்க முடிந்தால், தேரர் நாயக்க பதவியை ஏற்ற நாளில் அது ஒரு பெரிய கௌரவமாக அமையும்.”

திஸ்ஸ ராஜமகா விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி 2023 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் விகாரைக்கு அருகில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் மக்கள், சுமார் 14 தமிழ் குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 100 பரப்பு (6.2 ஏக்கர்) நிலத்தை இராணுவம் பலவந்தமாகக் கையகப்படுத்தி திஸ்ஸ விகாரையை நிர்மாணித்துள்ளதாகக் குற்றம் சுமத்துகின்றனர்.

“கி.மு. 3 ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றைக் கொண்ட இந்த விகாரை, தேவநம்பிய திஸ்ஸ மன்னனால் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்பு உள்ளது” என இராணுவம் தெரிவிக்கிறது.

“காங்கேசன்துறை வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையின் புனரமைக்கப்பட்ட விகாரையின் தூபியை வைக்கும் புண்ணிய உற்சவம்” 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி நடைபெற்றதாக, 2023 ஏப்ரல் 29 ஆம் திகதி இலங்கை இராணுவம் தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

Related Posts