வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது தற்போது உகந்தையில் இருந்து 408 கி.மீ. தென்கிழக்காக அமைவு பெற்றுள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.

வானிலை குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது தற்போது உகந்தையில் இருந்து 408 கி.மீ. தென்கிழக்காக அமைவு பெற்றுள்ளது.
அதேவேளை இலங்கையின் தென் பகுதியை மையம் கொண்டு கீழ் வளிமண்டல தளம்பல் நிலை ஒன்றும் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, தெற்கு, வடமத்திய மாகாணங்களுக்கு மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் மிகக் கனமழையையும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இம்மழை எதிர்வரும் 19.12.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது.
இந்த மழை புதன்கிழமை (17.12.2025) நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 17.12.2025 அன்று கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதேவேளை செவ்வாய்க்கிழமை முதல் (16.12.2025) வடக்கு, கிழக்கு, ஊவா, மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளுக்கு சற்று பலமான காற்று வீசும் வாய்ப்புள்ளது. குறிப்பாக மணிக்கு 30- 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் காற்றுச் சுழற்சி இலங்கைக்கு தென்கிழக்காக நிலவுவதாலும் இக்காற்றுச்சுழற்சி மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என்பதனாலும் இலங்கையின் தென் பகுதியை மையம் கொண்டு கீழ் வளிமண்டல தளம்பல் நிலை நிலவுவதாலும் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் சற்றுக் கனமழை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, கேகாலை, குருநாகல் மாவட்டங்களின் சில பகுதிகளில் நிலச்சரிவு அனர்த்தங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு.
ஆகவே மேற்கூறிய மாவட்டங்களில் உள்ள மக்கள் செவ்வாய்க்கிழமை முதல் (16.12.2025) எதிர்வரும் 19.12.2025 வரை கன மழை மற்றும் அதனோடு இணைந்த நிலச்சரிவு தொடர்பில் அவதானமாகவும் எச்சரிக்கை உணர்வோடும் இருப்பது அவசியம்.
வடக்கு, கிழக்கு, மற்றும் வட மத்திய மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள பல குளங்கள் வான் பாய்ந்து கொண்டிருக்கின்றன. வான் பாயும் நிலையிலும் உள்ளன. இதனால் அடுத்து வரும் நாட்களில் கிடைக்கும் மழை இந்தக் குளங்களின் வான் பாயும் நீரின் அளவை அதிகரிக்க கூடும்.
அதேவேளை நாட்டின் பல இடங்களிலும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலம் நிரம்பு நிலையை எட்டியுள்ளதனால் மேலதிகமாக கிடைக்கும் 75 மி.மீ. மழை கூட சில தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தை உருவாக்கும் வாய்ப்புள்ளது. எனவே இது தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.
அதேவேளை இலங்கையின் கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு ஆழ்கடற் பகுதிகளுக்கு பலநாட் கலங்களில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளவர்கள் வேகமான காற்று மற்றும் அதிக உயரம் கொண்ட கடலலைகள் தொடர்பில் அவதானமாக இருப்பது சிறந்தது என நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.