சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை தற்போது முழுமையாகச் சீர்செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, வேரஹெர பிரதான அலுவலகம் மற்றும் நாட்டின் அனைத்துப் பிரதேச அலுவலகங்களிலும் எந்தவிதமான சாரதி அனுமதிப்பத்திர புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
அதன்படி, வேரஹெர பிரதான அலுவலகம் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் (Online மற்றும் Offline) சாரதி அனுமதிப்பத்திர அச்சிடல் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் இன்று (03) முதல் வழமைபோல இடம்பெறும் என்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், முறைமை தடைப்பட்ட நாட்களில் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாதிருந்த மக்களின் வசதிக்காக முன்னர் அறிவிக்கப்பட்ட பின்வரும் விசேட ஏற்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும்:
எழுத்துப் பரீட்சை (Written Exams):
முறைமைக் கோளாறு மற்றும் வானிலை காரணமாக இரத்துச் செய்யப்பட்ட பரீட்சைகள், பின்வரும் புதிய திகதிகளில் நடைபெறும்:
2025.11.27 அன்று நடைபெறவிருந்த பரீட்சைகள் – 2025.12.08 அன்று நடைபெறும்.
2025.11.28 அன்று நடைபெறவிருந்த பரீட்சைகள் – 2025.12.09 அன்று நடைபெறும். (இந்தப் பரீட்சைகள், உங்களின் நேரம் ஒதுக்கப்பட்ட ஆவணத்தில் (Booking Document) குறிப்பிடப்பட்டுள்ள அதே நேரத்திலேயே நடைபெறும்.)
தவறவிடப்பட்ட நேர ஒதுக்கீடுகள் (Appointments):
முறைமை தடை ஏற்பட்ட 2025.11.27, 28 மற்றும் 2025.12.01, 02 ஆகிய தினங்களில் நேர ஒதுக்கீடு செய்திருந்த சேவையாளர்கள், அடுத்த இரண்டு வார காலத்திற்குள் அரசாங்கத்தின் எந்தவொரு வேலை நாளிலும் வருகை தந்து தமக்குரிய சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கடந்த சில நாட்களாக ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்புக் கோரியுள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், இனிவரும் காலங்களில் தடையின்றி சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது.