யாழில் அனர்த்த உதவிக்கு 24 மணி நேர அவசர இலக்கம் அறிவிப்பு

சீரற்ற காலநிலையால் ஏற்படக்கூடிய அனர்த்த அபாயக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னாயத்தங்கள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்று (26) கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்களுடன் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் மு.ப 10.00 மணிக்கு நடைபெற்ற இக் கலந்துரையாடலின் முடிவில், அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக மாவட்டச் செயலகத்தின் விசேட இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெறுவதற்காக மாவட்டச் செயலகத்தின் 0212117117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் என அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் இந்த அழைப்புகளுக்குப் பதிலளிப்பார். அவர் பதிலளிக்கத் தவறும்பட்சத்தில், அழைப்பு தனது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்குத் தானாகவே இணைக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் பிரதீபன் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில், அனர்த்த அபாயக் குறைப்பு நடவடிக்கைகள் குறித்து உத்தியோகத்தர்களிடம் கேட்டறிந்துகொண்ட அரசாங்க அதிபர், பின்வரும் முக்கிய அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

அனர்த்தம் ஏற்படும்போது உத்தியோகத்தர்கள் தமது கடமையிலிருந்து விலக முடியாது. அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

வெள்ள நீர் வழிந்தோடாமைக்கான தடைகளை ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் உடனடியாக அகற்றுவதற்கான இடங்களை உத்தியோகத்தர்களிடம் கேட்டறிந்து, உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.

வடிகால்களைச் சீர்செய்ய முதற்கட்டமாக 0.75 மில்லியன் ரூபா நிதியை உடனடியாக வழங்குமாறு அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் தொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்தார். இக் கோரிக்கைக்கு உடனடியாக நிதியும் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டால், அந்த நிலையங்களில் சுழற்சி முறையில் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தும் செயற்பாட்டை பிரதேச செயலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

உணவுப் பொதிகள், தறப்பாள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை பிரதேச செயலாளர்களின் ஒருங்கிணைப்பில் வழங்கப்பட வேண்டும்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் (தை) தொடக்கம் மார்ச் மாதம் (பங்குனி) வரை கிராம மட்ட ரீதியாக எடுக்க வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகளுக்கான திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும், யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினருமான எஸ். கபிலன், பொதுமக்களிடமிருந்து வடிகால்கள் சீர் செய்ய வேண்டிய கோரிக்கைகள் அதிகமாகக் கிடைக்கப்பெறுவதாகவும், வெள்ள அனர்த்தம் ஏற்பட்டால் முப்படையினர் உதவி செய்வதற்குத் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ சுரேந்திரநாதன், அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் ரி. என். சூரியராஜா உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Posts