பொலீஸ் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டோர் கண்காணிப்புத் தகவல் அமைப்பு அறிமுகம்!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் “டிஜிற்றல் ஶ்ரீலங்கா” செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக இலங்கையில் குற்றவியல் அல்லது போக்குவரத்து விதி மீறல் குற்றங்களுக்காகக் குற்றஞ்சாட்டப்படும், கைது செய்யப்படுபவர்களின் விபரங்களை உடனடியாகக் கண்டறிந்து விரைவாக நடவடிக்கை எடுப்பதற்கும், குற்றமற்றவர் எனின் அவரை விரைவாக விடுதலை செய்வவதற்கும் ஏற்ற வகையில் பொலீஸ் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டோர் கண்காணிப்புத் தகவல் அமைப்பு (Arrested Monitoring Information System – AMIS) எனப்படும் புதிய தகவல் தளப் பொறிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

“அமிஸ்” எனப்படும் இந்தத் தகவல் பொறிமுறையை நாட்டிலுள்ள சகல பொலீஸ் நிலையங்களும் கையாள முடியும். சந்தேக நபரொருவர் அல்லது குற்றஞ்சாட்டப்படும் நபரொருவரின் விரிவான குற்றவியல் வரலாற்றை இத் தளத்தில் காண முடியும். இதனால், நபரொருவர் கைது செய்யப்படும் போது அல்லது வேறேதாவது பரிசீலனைகளின் போது நபரொருவர் முன்னர் ஏதேனும் குற்றத்துக்கு உள்ளாக்கப்படுள்ளாரா என்பதை உடனடியாகச் சரிபார்க்க முடிவதுடன், சந்தேக நபரின் சட்டபூர்வ நிலையை விரைவாகச் சரிபார்க்கவும் உதவுகிறது.

இதுவரை காலமும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்கள், பொது அல்லது தனியார் நிறுவனங்கள் மூலம் அவர்களின் குற்றமற்ற தன்மை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே விடுவிக்கப்பட முடியும். ஆனால் புதிய அமைப்பின் கீழ், பொலீஸ் அதிகாரிகள் ஒரு சந்தேக நபரின் விவரங்களை “அமிஸ்” தகவல் தளத்தில் உள்ளிட்டு, அவர்களிடம் முந்தைய பதிவுகள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க முடியும், இதனால் எந்த குற்றங்களும் கண்டறியப்படாவிட்டால் உடனடியாக விடுவிக்க முடியும்.
ஏற்கனவே, ஏதாவது ஒரு வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாமல் அல்லது அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவதைத் தவிர்த்துவந்த நபர்களின் விபரங்களையும், அத் தகவல்த் தளத்தில் பார்க்க முடியும் என்பதால், போக்குவரத்து குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கைக்குப் பணிக்கப்பட்ட நபர்களைக் கூட நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்ததற்காக “அமிஸ்” தரவுத்தளத்தின் மூலம் அடையாளம் கண்டு கைது செய்யலாம் என்று பொலீஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Posts