170 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுச் செலவில் குறித்த வசதிகளுடன் கூடிய யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

2025.11.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 11 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நீண்டகால சமூகப் பிரச்சினைகள் மற்றும் சவால்களின் பின்னர் மீள்நிலைக்குத் திரும்பி வருகின்ற வடக்கு மாகாணத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்காகவும், விளையாட்டுக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மிகவும் முக்கியமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்காக, பாடசாலைகளிலும் விளையாட்டுக் கழகங்களிலும் மேசைப் பந்து, டென்னிஸ், பூப்பந்து, வலைப்பந்து மற்றும் சதுரங்கம் போன்ற உள்ளக விளையாட்டுக்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கமைய, 170 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுச் செலவில் குறித்த வசதிகளுடன் கூடிய யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.