முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பித்துவந்த ஆசிரியர் ஒருவர், சில மாணவர்களுடன் இணைந்து பல பாடசாலை மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதோடு, பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்காக நியமிக்கப்பட்டு ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த குறித்த ஆசிரியர், சில மாணவர்களுடன் இணைந்து பல மாணவிகளின் நிர்வாணப் புகைப்படங்களை வைத்து அச்சுறுத்தி அவர்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.
ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சிலர் மேற்கொண்ட இச்செயல்களை முல்லைத்தீவு இளைஞர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தொலைபேசிகளைச் சோதனையிட்டபோது, பல மாணவிகளின் நிர்வாண வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் மாணவிகளுடன் தவறான முறையில் நடந்துகொண்ட வீடியோக்கள் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.
ஆசிரியர், குறிப்பிட்ட மாணவர்களைப் பயன்படுத்தி மாணவிகளை காதல் வலையில் விழச் செய்து, அவர்கள் மூலம் மாணவிகளின் நிர்வாணப் புகைப்படங்களைப் பெற்றுள்ள சம்பவம் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியரின் தொலைபேசியில் இருந்த ஆவணங்கள் பொலிஸாரிடம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலரை பொலிஸார் விசாரணைக்கு அழைத்தனர்.
இந்த ஆசிரியர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
அந்த விசாரணைகளின் முடிவில், அவர் நேற்று முன்தினம் (04) பணி நீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.