யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனையினைப் பாதுகாத்து மீளுருவாக்கம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி இன்று (22) குறித்த மந்திரி மனைக்கு முன்பாக கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் பெய்த கனமழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் அதனை பாதுகாக்குமாறு கோரியே இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “இலங்கை அரசே தமிழர்களின் மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடு, இந்த இடத்தை உரிமை கோருபவரே மந்திரி மனையை இடித்துவிட்டு உல்லாச விடுதியா கட்டப்போகின்றீர்கள், தொல்லியல் திணைக்களமே பௌத்த சின்னங்களை பாதுகாப்பதுபோல் தமிழரின் மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடு, மன்னன் சொத்து மக்கள் சொத்து தனிநபரே உரிமை கொண்டாடாதீர்கள்” போன்ற வாசகங்களை எழுதிய பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.