ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களை ஆரம்பித்து வைக்க, ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க எதிர்வரும் 01ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதியின் அன்றைய நாளுக்கான செயற்பாடுகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் 01ஆம் திகதி காலை 08.30 மணியளவில் மையிலிட்டி மீன் பிடி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
தொடர்ந்து , யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத்தினை காலை 09.30 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார்.
அதன் பின்னர் பிற்பகல் 1.30 மணியளவில், மண்டதீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இதேவேளை, மறுநாள் 02ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், தென்னை முக்கோண வலய பணிகளையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.