இலங்கை ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு திருத்தத்திற்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் புதன்கிழமை (27) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இலங்கை ரயில்வே நிலைய அதிபர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற அரச வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி அயேஷானி ஜெயவர்தன மற்றும் சுரேஷ் மிதுஷா ஆகிய இரண்டு பெண்கள் பால்நிலை சமத்துவ நிபுணர் வீரசிங்கத்தின் ஆலோசனையின் படி சிரேஷ்ட சட்டத்தரணி நுவான் போபகே ஊடாக தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களான குமுதுனி விக்ரமசிங்க மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பாக சிரேஷ்ட அரச வழக்கறிஞர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசு வழக்கறிஞர் நயநாதாரா பாலபடபெந்தி, தொடர்புடைய வர்த்தமானி மட்டுமின்றி முழு ஆட் சேர்ப்பு கட்டமைப்பே இவ்வாறான பாரபட்சங்களை கொண்டுள்ளது. ஆகவே முழு அரச ஆட் சேர்ப்பு கட்டமைப்பை, பால்நிலை கூருணர்வுடன் முழு மக்களையும் பாரபட்சமின்றி உள்வாங்க கூடிய வகையில் செய்ய வேண்டிய திருத்தத்திற்காக அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார்.
மனுவின் அடிப்படையில் அரசாங்கம் பெண்களையும் உள்வாங்க செய்திருக்கும் முன்னேற்றம் குறித்து தெரிவிக்க வேறொரு திகதியில் அழைக்கப்பட வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் கோரினார், அதன்படி, இந்த மனுவை ஒக்டோபர் 30 ஆம் திகதி விசாரிக்க உத்தரவிட்டார்.
இலங்கை ரயில்வே துறையின் ரயில் நிலைய அதிபர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர். இதனால் தகுதிவாய்ந்த பெண்கள் அந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும் தேர்ந்தெடுக்கப்படவும் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்ட சம வாய்ப்பை இழந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை தங்கள் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கவும், பெண்களும் விண்ணப்பிக்கக்கூடிய வகையில் தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பைத் திருத்துமாறு பிரதிவாதி ரயில்வே துறைக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரியிருந்தனர்.