இராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட படுகொலை சம்பவம் இடம்பெற்று நேற்றுடன் 35 வருடங்கள் கடந்துவிட்டன.குறித்த படுகொலையின் நினைவிடத்தில் தீவக மக்கள் ஒன்றுகூடி தமது உறவுகளை நினைவுகூர்ந்து சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
அந்தவகையில் படுகொலை செய்யப்பட உறவுகளின் வாழும் உறவுகளில் இருவர் முதன்மைச் சுடரேற்றி நினைவிடத்துக்கு மலர்மாலை அணிவித்து குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தனர்.
குறித்த அஞ்சலி நிகழ்வில் ஏற்பாட்டாளர் பிரகலாதன், வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சி.அசோக்குமர் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்களும் கலந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தி அஞ்சலி செலுத்தினர்.
1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி தீவக பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலர் கொல்லப்பட்டிருந்தனர்.
குறித்த படுகொலைக்கு சாட்சியான கிணறு, மக்களால் அடையாளம் காணப்பட்டு நினைவு கூறப்பட்டு வருகின்றது.
குறித்த சம்பவம் குறித்து வாழும் சாட்சியாக இருக்கும் படுகொலைசெய்யப்பட்ட இருவரது தாயாரும் சகோதரியும் அன்றைய நாளின் வடுக்களையும் வேதனைகளையும் சாட்சியாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.