அரச மருத்துவர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டம்!!

மருத்துவர்களின் இடமாற்றத்தில் உள்ள முறைகேடுகள் மற்றும் வைத்தியசாலைகள் மூடப்படும் அவதான நிலை ஆகிய காரணிகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் திங்கட்கிழமை (25) காலை 08 மணிமுதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

சகல அவசர சிகிச்சை சேவைகள்,மகப்பேறு வைத்தியசாலைகள்,சிறுவர் வைத்தியசாலைகள்,புற்றுநோய் வைத்தியசாலை (மஹரகம),சகல சிறுநீரக நோய் பிரிவு,இராணுவ வைத்தியசாலை,தேசிய மனநல வைத்திய நிறுவனம் ஆகியவற்றின் சேவைகள் தடையின்றி இடம்பெறும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகள் மூடப்படும் அவதானம்,மருந்து கொள்வனவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு,தரமான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வைத்தியசாலைகளுக்கு வழங்காமை உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு திங்கட்கிழமை (25) காலை 08 மணிமுதல் பணிப்புறக்கணிப்பில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

வைத்தியர்களுக்கான இடமாற்றம் தற்போது முறையற்ற வகையில் அமுல்படுத்தப்படுகிறது.இதனால் நாடளாவிய ரீதியில் 200 வைத்தியசாலைகள் மூடப்படும் அவதானநிலை காணப்படுகிறது.

சம்பள அதிகரிப்பு, மேலதிக கொடுப்பனவு, மற்றும் இதர சலுகைகளை முன்னிலைப்படுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவில்லை. இலங்கையில் இலவச மருத்துவ துறையை பாதுகாப்பதற்காகவே போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.

அரசாங்கம் முறையாக செயற்படும் என்ற நம்பிக்கையில் தான் சுகாதாரத்துறையினர் உட்பட நாட்டு மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.ஆகவே மக்களின் நிலைப்பாட்டுக்கமைய அரசாங்கம் செயற்பட வேண்டும்.இவ்வாறான நிலையில் எமது போராட்டத்தை மலினப்படுத்தும் வகையில் அரசாங்க தரப்பினரால் போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.

பணிப்புறக்கணிப்புக்கு மத்தியிலும் சகல அவசர சிகிச்சை சேவைகள்,மகப்பேறு வைத்தியசாலைகள்,சிறுவர் வைத்தியசாலைகள்,புற்றுநோய் வைத்தியசாலை (மஹரகம),சகல சிறுநீரக நோய் பிரிவு,இராணுவ வைத்தியசாலை,தேசிய மனநல வைத்திய நிறுவனம் ஆகியவற்றின் சேவைகள் தடையின்றி இடம்பெறும்.

Related Posts