இந்த ஆட்சி கவிழும் என வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றனர். இந்த போலி பரப்புரைக்கு வடக்கில் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளும் உயிர்கொடுக்க முற்படுகின்றனர் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இலங்கை ஐயப்ப சுவாமிமார்களின் யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தியதன் பின்னர் அது தொடர்பான விசேட கலந்துரையாடல் திங்கட்கிழமை (18) கொழும்பு செட்டியார் தெரு கல்யாண முருகன் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
ரவி குருசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அதிதியாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பிரதம அதிதியாகவும், இந்து சமய அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை.அனிருத்தன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கெளரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
நாடளாவிய ரீதியில் உள்ள ஐயப்ப நாமத்தில் இயங்கும் அமைப்புக்கள், குரு சுவாமிகள் மற்றும் ஐயப்பன் தொடர்புடைய அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதன்போது சுவாமிமார்களால் பரிந்துரைக்கப்பட்ட ஐயப்ப மாலை அணிந்த சுவாமிமார்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் இருந்து வருகைதந்த ஐயப்பசாமி குருமார்கள் தங்களது கருத்துக்களையும் முன்வைத்தனர். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர்களை குருசுவாமிகள் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.
இதன்போது அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,
ஐயப்பன் யாத்திரை கடந்த காலங்களில் புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தப்படவில்லை. இதற்குரிய முயற்சி முன்னெடுக்கப்பட்டும் ஏன் அத்தனை வருடங்கள் நடக்கவில்லை? இனவாத ஆட்சியாளர்கள், இனவாத அமைச்சரவை இருந்ததால்தான் நடக்கவில்லை.
ஆனால் எமது சமதர்ம ஆட்சியில் இனவாதம் இல்லை. மக்கள் நலனுக்கே முக்கியத்துவம், முன்னுரிமை வழங்கப்படுகின்றது.
அந்தவகையில் புனித யாத்திரை தொடர்பான அமைச்சரவை பத்திரம் வந்தபோது அதற்கு ஏகமனதாக ஆதரவளிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு முழுமையாக முன்னின்று செயற்பட்ட பிரதி அமைச்சர் தோழர் பிரதீப்புக்கு நன்றிகள். இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர்.
சமூக சீர்கேட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, சமூக மாற்றத்துக்கு ஆன்மீகவாதிகளின் பங்களிப்பும் மிக முக்கியம்.
அதேவேளை, வறுமை ஒழிப்புக்குரிய நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. மறுபுறத்தல் வரி வருமானம் அதிகரித்துள்ளது. பொருளாதார இலக்குகளை அடைந்து வருகின்றோம்.
இந்நிலையில் ஆட்சி மாற்றம் பற்றி வங்குரோத்து அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதற்கு உயிர்கொடுக்கும் வகையில் வடக்கில் தோல்விகண்ட, மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றனர் என்றார்.