நல்லூர் கோயில், நாகவிகாரை மற்றும் யாழ். நூலகத்திற்கு பிரதமர் விஜயம்!!

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக வடமாகாண அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஞாயிற்றுக்கிழமை (03) முற்பகல் நல்லூர் கந்தசுவாமி கோயில், யாழ். ஸ்ரீ நாகவிகாரை மற்றும் யாழ். நூலகம் ஆகிய இடங்களுக்கும் விஜயம் செய்தார்.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு காலை சென்ற பிரதமர், அங்கு ஆசி பெற்றார். வருடாந்தத் திருவிழா நடைபெறும் காலப்பகுதியில் யாழ்ப்பாணம் நல்லூர் கோயிலுக்குச் சென்று ஆசி பெறுவது ஒரு பாக்கியம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும், யாழ்ப்பாணம் நாக விகாரை சர்வதேச பௌத்த மையத்திற்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், விகாராதிபதி சங்கைக்குரிய மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரரைச் சந்தித்து, புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து அவருக்கு விளக்கமளித்தார். வட மாகாணத்தில் சமய மற்றும் தேசிய நல்லிணக்கத்திற்காக நாக விகாரை முன்னெடுத்து வரும் செயற்றிட்டங்களைப் பாராட்டிய பிரதமர், தேசிய ஒற்றுமைக்கு மொழி மிகவும் முக்கியமானது என்றும், எனவே, புதிய கல்விச் சீர்திருத்தத்தில் முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் மொழி ஒரு செய்முறைப் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணப் பொது நூலகத்தைப் பார்வையிட்ட பிரதமர், அங்கு வருகை தந்திருந்த பிள்ளைகளுடன் சுமுகமாகக் கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டதனால் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்றும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் யாழ்ப்பாணப் பொது நூலகத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts