செம்மணி புதைகுழி; நீதியான விசாரணைகளுக்கு அரசு தயார்!!

செம்மணி விவகாரம் தொடர்பில் ஆய்வுகளை நடத்தவும் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ளவும் அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

செம்மணி அணையா விளக்கு போராட்டத்திற்குச் சென்றிருந்த எம்மை எதிர்த்தவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அரச நிதி மூலோபய கூற்று தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

செம்மணி புதைகுழி தொடர்பான பிரச்சினை மிகவும் முக்கியமானது. அது உணர்வுபூர்வமான பிரச்சினையாகும். இதற்காகவே அவ்விடத்தை பார்வையிடச் சென்றேன். ஒரு சில சாக்கடை அரசியல்வாதிகளே எமக்கு எதிராக செயற்பட்டு அங்கு அசம்பாவிதங்களை ஏற்படுத்தினர்.

கிருஷாந்தியின் கொலை தொடர்பான வழக்கு பல வருடங்களாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனையும் வழங்கப்பபட்டுள்ளது. இந்நிலையில், அங்கு தற்போது நூற்றுக்கணக்கான எலும்பு கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.இந்த புதைகுழியை அகழ்வதற்கான நிதியையும் எமது அரசாங்கமே வழங்குகிறது.

நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செம்மணிக்கும் சென்றிருந்தார். இதன் போது குறித்த உடல்களை பரிசோதனை செய்வதற்கான உபகரணங்களைப் பெற்றுத்தருமாறும் நாம் அவரிடம் கோரியுள்ளோம்.

அன்றைய தினம் அந்த நிகழ்வைப் பார்வையிடுவதற்காக நானும் சென்றிருந்தேன். அப்போது அங்கே 10 அல்லது15 பேர் வரையிலானோர் எமக்கு எதிராக கோசங்களை எழுப்பினர். நான், மக்களை சந்தித்து உரையாடிக்கொண்டிருந்த போது, அங்கு திட்டமிட்டு ஏவப்பட்ட கும்பலால், இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

உண்மையில் அங்கிருந்த மக்கள் அவ்வாறு செயற்படவில்லை. அந்த மக்களின் பிரச்சினைகளை கேட்டறிவதற்காகவே நான் அங்கு சென்றேன். இவ்வாறான பிரச்சினையை கண்டறிவதற்காக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் அவ்விடத்திற்கு வருவதே, அதற்கான அங்கீகாரமாக இருக்கும்.

அந்த அங்கீகாரத்தை புதைக்கின்ற வகையிலேயே, அன்னறைய தினம் சில அரசியல் சாக்கடைகளின் செயற்பாடுகள் இருந்தன.

Related Posts