வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 2 மாணவர்கள் பாதுகாப்பற்ற நீர் நிலையில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.
நேற்று (வியாழக்கிழமை) விளையாட்டு போட்டிக்காக வவுனியா பல்கலைக்கழக மைதானத்திற்கு இந்த மாணவர்கள் சென்றிருந்த நிலையில்,இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் 14 மற்றும் 15 வயதுடையவர்கள் என்றும் சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இரண்டு மாணவர்களின் இழப்பிற்கு வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வவுனியாவில் விளையாட்டுப் போட்டியின் போது இரு மாணவர்கள் திடீரென மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும், பாடசாலை சமூகத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்பதை அனைவரும் உறுதி செய்வோம்.” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.