ஜனாதிபதி – தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு இன்று!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இடையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது.

சந்திப்பிற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூடுவதுடன், சந்திப்பின் நோக்கம், முன்வைக்க வேண்டிய காரணிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் தீர்வு விடயங்களில் அரசாங்கம் காட்டவேண்டிய அக்கறை, விரைவாக அரசியல் தீர்வுகளை நோக்கி பயணிக்க வேண்டியதன் தேவை, அரசியல் அமைப்பு உருவாக்க நகர்வுகள் மற்றும் வடக்கின் காணி விடுவிப்பு உள்ளிட்ட முக்கிய காரணிகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ள சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பேசவுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூடி ஜனாதிபதியுடன் முன்னெடுக்கும் சந்திப்பின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து ஆராயவுள்ளனர்.

ஜனாதிபதியுடன் இன்று பிற்பகல் முன்னெடுக்கவுள்ள சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைபிற்குள் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்ற காரணத்தினாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் குறித்த சந்திப்பு தொடர்பில் பங்காளிக்கட்சிகளிடத்தில் எந்தவித தெளிவுபடுத்தலையும் மேற்கொள்ளாத நிலையிலும் இன்று காலை கூடும் பாராளுமன்ற குழுக்கூட்டத்தின் பின்னர் தீர்மானம் எடுப்பதாக டெலோ உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் கேசரிக்கு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் ,

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்களில், அபிலாசைகளை வெற்றி கொள்வதில், அபிவிருத்திகள் மற்றும் ஏனைய சகல விடயங்களையும் செய்து கொள்வதில் தமிழர் தரப்பு ஜனாதிபதியுடன் தான் பேசியாக வேண்டும். சர்வதேசம் என்ன கூறினாலும் அழுத்தம் கொடுத்தாலும் நாம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியே அவற்றை செய்து முடிக்க வேண்டும். ஆகவே ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் எந்த பின்னடையும் இருக்க தேவையில்லை.

ஆனால், இந்த நாட்டில் தமிழ் மக்கள் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர், தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வொன்று அவசியம் என்பதை வெளிப்படையாக கூற வேண்டும். வெறுமனே வடக்கு கிழக்கில் அபிவிருத்திகளை முன்னெடுத்து தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியாது. ஜனாதிபதியும், அரசாங்கமும் தொடர்ச்சியாக இதே நிலைப்பாட்டில் இருந்துகொண்டு எம்முடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதால் தீர்வுகள் கிடைக்கப்போவதில்லை.

அதேபோல் இலங்கைக்கு எதிராக ஜெனிவா அழுத்தங்கள் மற்றும் சர்வதேச நாடுகளில் அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதனை சமாளிக்க எம்மை பகடைக்காய்களாக பயன்படுத்த நினைத்தால் அதற்கு எம்மால் இடமளிக்க முடியாது.

இந்திய பிரதமர், வெளிவிவகாரத்துறை அமைச்சர், சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் என பலர் இலங்கைக்கு வரவுள்ள நிலையில் அவர்களும் தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்த நகர்வுகள் அரசாங்கத்திடம் கேட்பார்கள். அவ்வாறான நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகளை காண்கின்றோம் என கூறுவதற்கான ஒரு கதையையே உருவாக்க நினைப்பதாக தெரிகின்றது.

உண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஜனாதிபதி விரும்புகின்றார் என்றால் முதலில் தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளில் ஒரு சிலவற்றையேனும் செய்திருக்க வேண்டும். கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் என பலரை ஜனாதிபதி விடுவித்தார்.

ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் பலர் நீண்ட காலமாக தடுப்பு காவலில் உள்ளனர். அவர்கள் விடுவித்திருக்க முடியும். காணிகளை விடுவித்திருக்க முடியும். அதுமட்டுமல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பிடமும் முறையான நிழச்சிநிரல் இல்லை என வெளிப்படுகின்றது. ஆகவே முதலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இது குறித்து தெளிவாக கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.

Related Posts