கோரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாத்திரம் பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த முடியும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தால், போக்குவரத்து அமைச்சு அதற்கு இணங்க வேண்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இராஜாங்க அமைச்சர் அமுனுகம மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
இது தொடர்பான சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டால், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் தொடருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் தடுப்பூசி அட்டையை சரிபார்க்க போக்குவரத்து அமைச்சு உத்தரவு பிறப்பிக்கும்.
தொற்றுநோய் தொடர்பான முடிவுகளை சுகாதார அமைச்சு எட்ட வேண்டும். போக்குவரத்து அமைச்சு அவற்றுக்கு இணங்க வேண்டும்.
எனினும் புதிய அரசிதழ் வெளியிட்டமை தொடர்பில் போக்குவரத்து அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எவ்வாறாயினும், எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டவுடன், தேவையான உத்தரவுகளை அமைச்சு வெளியிடும்-என்றார்.