ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடன் தீர்வு வழங்கக் கோரியும் பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியும் உலக ஆசிரியர் தினமான இன்று நாடுமுழுவதும் போராட்டங்கள் இடம்பெற்றன.
ஆசிரியர் மற்றும் அதிபர் இணைந்த தொழிற்சங்கங்களினால் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இன்று முற்பகல் 10 மணியளவில் வடமாகாண கல்வியமைச்சுக்கு முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
கல்வி நெருக்கடிக்கு தீர்வு வழங்கு, 24 வருட ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வினை வழங்கு, இலவச கல்வியை இராணுவ மயமாக்கும் கொத்தலாவல சட்டவரைவை உடனடியாக ரத்து செய் ஆகிய மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது.
கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இதேவேளை, இன்று காலை முதல் ஹட்டன் மற்றும் நாவலப்பிட்டியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஹட்டன் மணி கூட்டு கோபுரத்திற்க்கு முன்பாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்களினால் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.
நாவலபிட்டி கல்வி வலயத்திற்குட்பட்ட 38பாடசாலைகளை சேர்ந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களினால் ஆர்ப்பாட்டம் நாவலபிட்டி நகரில் முன்னெடுக்கப்பட்டது.
கல்வி நெருக்கடிக்கும் மற்றும் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வினை பெற்றுக்கொடு, அசிரியர்கள், அதிபர்களின் தொழில் கௌரவத்தை கெடுக்காதே, தொற்று நோயினால் வீழ்ச்சியடைந்துள்ள கல்வியை மீட்க நிதி ஒதுக்கு, பிள்ளைகளின் கல்வி உரிமைய உறுதிபடுத்து, இணையவழிக் கல்விக்கு தேவையான வசதிகளை வழங்கு போன்ற பாதாதைகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியும் ஆசிரியர், ஆதிபர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“இன்று உலகம் முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டாலும் இலங்கையில் அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு 24 வருடங்கலாக தீர்க்கப்படாமல் இருக்கிறது.
நாங்கள் கிட்டத்தட்ட ழூன்று மாதங்கலாக இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம். அரசு எமது பிரச்சினை குறித்து கண்டுகொள்வதில்லை. ஆகையால்தான் ஆசிரியர் தினத்தை இன்று நாம் ஒரு கருப்பு தினமாக கொண்டாடுகிறோம்.
இது இரண்டரை இலட்சம் அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினை அல்ல, இது நாட்டில் உள்ள ஒன்றரைக் கோடி பெற்றோர்கள், பிள்ளைகள் எதிர்நோக்கும் பெரும் பிரச்சினை.
நாங்கள் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிகொண்டு சமூக இடைவெளியினை பேணி இந்த ஆர்பாட்டத்தில் நாம் ஈடுபடுகின்றோம். ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையில் நாட்டில் உள்ள மதுபானசாலைகளை இந்த அரசு திறந்த போது மக்கள் அலை அலையாக குவிந்தார்கள். அப்போது தொற்று பரவவில்லையா?
பேருந்துகளில் மற்றும் சதொச விற்பனை நிலையங்களில் மக்கள் குவிந்து
கானப்படுகின்ற போது தொற்று பரவவில்லையா?
அரசுக்கு நாம் ஒன்றை கூறுகின்றோம் எமது பிரச்சினைக்கு நாளை தீர்வை வழங்குங்கள். நாளையதினமே நாம் கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம். இல்லாவிட்டால் எமது ஆர்பாட்டம் தொடரும்” என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.