Ad Widget

யாழ்.போதனா வைத்திய சாலையின் கவலையீனம் – 30 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!

யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த நபரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் , உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து , மரணச்சடங்கில் கலந்து கொண்ட 30 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்தின் கவலையீனமான செயற்பாட்டினால் தாம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோம் என பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் சிறாம்பியடியை சேர்ந்த முதியவர் சுகவீனம் காரணமாக கடந்த 4ஆம் திகதி யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதன் போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று இனம் காணப்படவில்லை.

அந்நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உறவினர்கள் நேற்றைய தினம் காலை இறுதி கிரியைகளுக்கான ஏற்பாடுகள் செய்த போது , நேற்று முன்தினம் வெளியான பி.சி.ஆர். பரிசோதனையில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதியானது.

அதனால் காலை உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்ற சுகாதார பிரிவினர் சடலத்தை மீள பெற முயன்ற போது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையும் மீறி சடலத்தை பொறுப்பெடுத்த சுகாதார பிரிவினர் , கொரோனா சுகாதார விதிமுறைகளுக்கு அமைய கோம்பயன் மணல் மயானத்தில் சடலத்தை மின் தகனம் செய்தனர்.

அந்நிலையில் தற்போது கொரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் மரண சடங்கில் கலந்து கொண்ட உறவினர்கள் , அயலவர்கள் என 30 குடும்பங்களை சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.

Related Posts