Ad Widget

யாழில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அடையாம் காணப்பட்டவர்களில் 8பேர், காரைநகர் இ.போ.ச சாலையில் பணியாற்றும் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் காப்பாளர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது,

“யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 387 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 382 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 21பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டவர்.

யாழ்ப்பாணம் மாநகர பொதுச்சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், கார்கில்ஸ் கட்டடத் தொகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றுபவர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலையைச் சேர்ந்த 90 பேரிடம் பி.சி.ஆர்.பரிசோதனை நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் சாரதிகள் மூவர், நடத்துனர்கள் மூவர் மற்றும் காப்பாளர்கள் இருவர் அடங்குகின்றனர்.

ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 9பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தபட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts