Ad Widget

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை குறித்து பான் கீ மூனுக்கு கடிதம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொறன்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்கள் பலர் அண்மையில் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்தும், மேற்படி மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவில் தனது நகரசபை வட்டாரத்தில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் கவலைகொண்டிருப்பது குறித்தும் றேமன் சோ தனது அவசரக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

´எனது நகரசபை வட்டாரத்தில் வாழும் தமிழ் பேசும் வாக்காளப் பெருமக்கள் சார்பாக நான் இந்தக் கடித்தை எழுதுகின்றேன்.

அவர்கள் தங்கள் உறவுகள் இலங்கை அரசின் கோரப் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் பரிதாபத்தை கண்டு மனம் நொந்துபோயுள்ளார்கள்.

அங்கு மாணவர்கள் மட்டுமல்ல அப்பாவித் தமிழ் மக்களும் தொடர்ந்து இராணுவத்தால் கொடுமைப் படுத்தப்படுகின்றார்கள்.

எனவே இங்குள்ள தமிழ் மக்களின் சார்பில் நான் நியூயோர்க் நகருக்கு வந்து தங்களை நேரடியாகச் சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சனைகள் மற்றும் வேண்டுகோள்கள் ஆகியவை தொடர்பாக உரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு தங்களை பணிவாகக் கேட்டுக்கொள்கினறேன்´.

இவ்வாறு நகர சபை அங்கத்தவர் றேமன் சோ ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்திற்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts