பிரபாகரனின் முடிவினால் திலீபன் உண்ணாவிரம் இருக்கவில்லை – கமால் குணரட்ணவின் கருத்திற்கு ஐங்கரநேசன் பதிலடி

திலீபன் உண்ணாவிரதம் இருந்தமை தலைவர் பிரபாகரனின் முடிவோ தெரிவோ அல்ல என்றும் அவர் சுயமாகவே இந்த முடிவை எடுத்துத் தலைவரிடம் அதற்கானஒப்புதலைப் பெற்றிருந்தார் என்றும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

திலீபன் ஒரு அரசியற் போராளி என்றும் அவர் நோயாளி அல்ல என தெரிவித்த ஐங்கரநேசன் நல்ல தேக ஆரோக்கியத்துடனேயே நல்லூரான் வீதியில் உண்ணாவிரத மேடை ஏறினார் என்றும் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்துகளுக்குப் பதில் கொடுக்கும் விதமாக அவர் விடுத்திருத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்துடன் ஏற்பட்ட அமைதிக் காலத்தில் அப்போது யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன், மலையகத்தில் தமிழ் உறவுகளுக்காக வீட்டுத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் இருந்தார்.

ஆனால், ஒப்பந்தத்துக்கு மாறாகத் தமிழர் தாயகப் பிரதேசங்களில் புதிதாகக் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டதோடு, சிங்களக் குடியேற்றங்களும் நிகழத் தொடங்கின. அத்தோடு நிராயுத பாணிகளாக உலாவிய புலிகள் மீதுபிற ஆயுதக் குழுக்கள் தாக்குதலையும் தொடங்கினர்.

இவற்றைத் தடுக்கும் முகமாகவே திலீபன், ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் என ஐங்கரநேசன் சுட்டிக்காட்டினார்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான தரப்பினர்களாலும் பேரினவாதிகளாலும் விடுதலைப் புலிகள் பற்றிய பல்வேறு ஊகங்களும், தவறான தகவல்களும் பரப்பப்பட்டுவருகின்றன.

அவற்றில் ஒன்றே திலீபன் உண்ணாவிரதத்தால் உயிரிழக்கவில்லை அவர் நோயாளி என்பதால் பிரபாகரன் உண்ணாவிரதம் இருக்க அனுப்பி வைக்கப்பட்டார் என்ற பாதுகாப்பு அமைச்சின் செயலர் கமால் குணரட்ண கூறியிருக்கும் நயவஞ்சகக் கருத்து என்றும் ஐங்கரநேசன் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்கள் பற்றிய உண்மைகள் ஒருபோதும் தோற்கடிக்கப்படாது என்றும் அஞ்சலி நிகழ்ச்சிகளுக்குத் தடை ஏற்பட்டாலும் மக்கள் மனங்களில் குடியேறியிருக்கும் திலீபன் பற்றிய எழுச்சி நினைவுகளுக்கு ஒருபோதும் தடைபோட முடியாது என்றும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Related Posts