கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் வருமானத்தை இழந்த குடும்பங்களிற்கு வழங்கப்பட்டு வந்த 5,000 ரூபா கொடுப்பனவை ஜூன் மாதத்தில் வழங்குவதில்லையென அமைச்சரவை நேற்றையதினம் (20) முடிவு செய்துள்ளது.
பொதுத் தேர்தல் வரவுள்ளதால் இந்த கொடுப்பனவை நிறுத்தும்படி தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த அறிவிப்பை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கொடுப்பனவு அரசியல் ஆதாயம் பெறும் நடவடிக்கையாக கருதப்படலாமென்பதால், கொடுப்பனவு குறித்து மீளாய்வு செய்யும்படி கடந்த 17ஆம் திகதி, ஜனாதிபதியின் செயலாளரை கடிதம் மூலம் கேட்டுக் கொண்டிருந்தார் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய.
நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த கடிதம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இது ஒரு அரசியல் திட்டமாக இருக்கலாம் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளதால் அடுத்த மாதம் அதை வழங்குவதில்லை என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அடுத்தடுத்த மாதங்களில் தேர்தலை நடத்த ஆணைக்குழு தயாராக இருக்கும் நிலையில், 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவது ஒரு அரசியல் திட்டம் என்று ஆணைக்குழு கருதுவதால், அரசாங்கம் கொடுப்பனவை செலுத்தி தேர்தல் சட்டங்களை மீற வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.