நாட்டில் வாழும் மக்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் உயிரைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “நோயாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் தொடர்பில் அறியக்கிடைத்ததும், அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொற்று அச்சுறுத்தல் காரணமாகவே ஆயிரக்கணக்கான மக்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கான உணவு, மருத்துவ வசதிகளை அரசாங்கம் தற்போது வழங்கி வருகின்றது.
எவ்வளவு அபாயமான தொற்று நோயாக இருந்தாலும், எந்தளவு சிரமங்களை எதிர்கொண்டாலும் நாம் மக்கள் சார்பில் செயற்படத் தயாராக இருக்கின்றோம்.
மாணவர்களின் பாதுகாப்புக் கருதி பாடசாலைகளை மூடினோம். படிப்படியாக விமானப் பயணங்களை மட்டுப்படுத்தினோம். இத்தாலியின் நிலைமை மற்றும் சர்வதேச நாடுகளின் நிலைமைகளை கருத்திற்கொண்டு படிப்படியாக தீர்மானங்களை எடுத்துள்ளோம்.
தற்போது நாடு பூராகவும் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. உலகில் மிகக் கொடுமையான பயங்கரவாதம் நிலவிய காலத்தில் கூட நாடு பூராகவும் ஊரங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டி ஏற்படவில்லை. எனினும், சிலரது பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக, இன்று இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டி ஏற்பட்டது.
நாட்டில் பல மாதங்களுக்கு போதுமான வகையில் மருந்து, உணவு , எரிபொருள் உள்ளிட்ட அனைத்தும் உள்ளதாகவும் தேவையற்ற வகையில் குழப்பமடைய வேண்டாம்.
வைத்தியர்கள் கூறும் ஆலோசனைகளையும், அரசாங்கம் கூறும் ஆலோசனைகளையும் உரிய முறையில் பின்பற்றினால், மிக விரைவில் இந்த தொற்று நோயில் இருந்து மீள முடியும்“ எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
 
					



 
												
							 
												
							 
												
							 
												
							 
												
							