கொரோனா (கொவிட்-19) ஒரு உலகளாவிய தொற்று நோய். இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் கொரோனா வைரஸின் பரவலை உலகளாவிய ரீதியிலான தொற்றுநோய் என உலக சுகாதார ஸ்தாபனம் உத்தியோகபூர்வமாக பிரகடனம் செய்துள்ளது.

இந்த நோயின் வியாபகம் குறித்து தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரொஸ் அதனொம் (Tedros Adhanom) தெரிவித்தார். கொவிட்-19 வைரஸானது உலகெங்கிலும் 114 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 18ஆயிரத்துக்கும் அதிகமாகும்.
ஐரோப்பாவைப் பொறுத்தவரையில், இத்தாலியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகும். இங்கு உணவகங்கள், மருந்து விற்பனை நிலையங்கள் போன்றவற்றைத் தவிர சகல கடைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மதுபான விற்பனை நிலையங்கள், சிகை அலங்கார நிறுவனங்கள், அத்தியாவசியம் அற்ற பொருள் விற்பனை நிலையங்கள் போன்றவை மூடப்படும் என இத்தாலிய பிரதமர் அறிவித்துள்ளார்.
அதேவேளை, நாளை தொடக்கம் தமது இராஜ்ஜியத்திற்கான சகல சர்வதேச விமானச் சேவைகளையும் இடைநிறுத்துவதாக கட்டார் அறிவித்துள்ளது. இங்கு உள்நாட்டு விமானச் சேவைகள் மாத்திரம் நடத்தப்படும். குவைத்தில் நாளை தொடக்கம் எதிர்வரும் 26ஆம் திகதி வரையிலான காலப்பகுதி பொது விடுமுறைத் தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடுவதற்கும் குவைத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 என்பது உலகளாவிய ரீதியில் பரவக்கூடிய தொற்று நோய் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்காவில் பங்குச் சந்தைகள் பெரும் சரிவை எதிர்கொண்டுள்ளன. உலகெங்கிலும் உற்பத்தி செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக பீபீசி செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மருத்துவ வசதிகள் குறைந்த நாடுகளில் கொவைட்-19 நோய் தடுப்புக்கு உதவும் வகையில், சீனா, உலக சுகாதார அமைப்புக்கு 2 கோடி அமெரிக்க டாலர் நிதி வழங்க உள்ளது. இதற்கான உடன்படிக்கையில் சீனாவும் உலக சுகாதார அமைப்பும் அதிகாரப்பூர்வமாகக் கையொப்பமிட்டுள்ளன.
இது குறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டெட்ராஸ் சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது கூறுகையில், கரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்வதில், சீனாவின் அனுப்பவத்தைப் பின்பற்ற வேண்டும்.
சீனாவில் தற்போது வைரஸ் பரவல் வெகுவாக குறைந்துள்ளது. நோய் பரவல் தடுக்கப்பட்டு, அதற்கான தடுப்பூசி ஆராயப்பட்டுள்ளது. இது, அரசின் தலைமை ஆற்றலுடனும், நாட்டின் மக்களின் ஒத்துழைப்புடனும் தொடர்புடையது. பிற நாடுகள் இந்த நடைமுறையைக் கடைபிடித்தால் நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
.