“உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு ஜனாதிபதி அழைப்பு!!

நாட்டின் நிறைவேற்று அதிகாரமுடைய 7ஆவது ஜனாதிபதியாக நந்தசேன கோத்தாபய ராஜபக்ச பதவியேற்றுக் கொண்டார்.

அனுராதபுர ருவன்வெலி மகா தூபி முன்பாக, பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூர்ய முன்னிலையில் கோத்தாபய ராஜபக்ச சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றார்.

இந்த பதவியேற்று சுபவேளையில் முற்பகல் 11.45 மணிக்கு ஆரம்பமானது. 11.50 மணிக்கு உறுதியுரை எடுத்துக்கொண்டு கையொப்பமிட்டார்.

இங்கு அவர் உரையாற்றுகையில்

சிறுபான்மையினரை இந்த வெற்றியில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. ஜனாதிபதியாக அவர்களிடம் மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன், என்னுடன் இணைந்து செயற்படுங்கள்”

இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தனது முதலாவது உரையில் வலியுறுத்தினார்.

சிங்கள மக்களின் வாக்குகளினாலேயே வெற்றிபெற்றேன். சிங்கள மக்களின் வாக்குகளால் மட்டும் என்னால் வெற்றிபெற முடியும் என்பது எனக்குத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது;

எனது வெற்றியில் பங்கெடுத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன், சிவில் சமூகத்தினர் ஊடகத்துறையினருக்கும் நன்றிகள்.

எனது தேர்தல் அறிக்கையில் உங்களுக்கு குறிப்பிட்ட படி இலங்கையைக் கட்டியெழுப்புவேன்.

எந்தவொரு அரச அலுவலகத்திலும் எனது ஒளிப்படத்தையோ பிரதமர் மற்றும் அமைச்சர்களின் ஒளிப்படத்தையோ பொருத்த வேண்டாம். தேசிய இலச்சினையை மட்டும் பொருத்துங்கள்.

இலங்கை நடுநிலையான அணிசேரா நாடாகவே இருக்கும், சர்வதேச சக்திகளுக்கிடையிலான விவகாரங்களில் எந்தவொரு பக்கமும் சார்ந்து செயற்படாது.

அரசு மக்களுக்கு முன்மாதிரியாக செயற்படவேண்டும். எனது ஆட்சியில் ஊழல்களுக்கு இடமளிக்கமாட்டேன் – என்றார்.

இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஆளும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மதத் தலைவர்கள், கல்வியாளர்கள் உள்பட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது அவர் அரசியல் தலைவருக்கான பாரம்பரிய வெள்ளை உடையை முதன்முறையாக அணிந்திருந்தார்.

Related Posts