Ad Widget

T20 உலக கோப்பை: பாகிஸ்தான் அணி இந்தியா செல்ல தயக்கம்?

பாதுகாப்பு காரணங்களால் இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் அணி பங்கேற்காது என தெரியவந்துள்ளது.

ஆறாவது இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் மார்ச் 8 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் 19 தர்மசாலா நகரில் நடைபெறும் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் அணி இந்தியா வந்து விளையாடுவதில் தயக்கம் காட்டி வருகிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் சஹாரியார் கான் கூறுகையில், பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சென்று விளையாடுவது குறித்து பாகிஸ்தான் அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். ஒருவேளை அரசு அனுமதி மறுக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடாது. பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகளை வேறு நடுநிலையான இடத்தில் நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் சங்கத்திடம் கோரிக்கை வைக்கப்படும். இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மைதானங்களில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் அணி தயாராகவே உள்ளது என்றார்.

பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடுவதில் சில குறிப்பிட்ட அச்சுறுத்தல்கள் உள்ளன. எனவேதான், நாங்கள் இதுதொடர்பாக அரசை அணுகி உள்ளோம். இந்த அச்சுறுத்துல்கள் பொதுவானது அல்ல என்றார் கான்.

பொதுவான அச்சுறுத்தல் காரணமாக வங்க தேசத்தில் நடைபெற்று வரும் 19 வயதுக்குள்பட்டோருக்கான உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி புறக்கணித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை சிவசேனையின் போராட்டத்தைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் பணியாற்றவிருந்த பாகிஸ்தான் நடுவர் அலிம் தாரை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திரும்ப பெற்றது.

மேலும் கிரிக்கெட் வர்ணனையாளராகப் பணியாற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் வாசிம் அக்ரம் மற்றும் ஷோயிப் அக்தர் ஆகியோரும் முன்னதாகவே நாடு திரும்பினர்.

Related Posts