2027 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாடு தழுவிய சொத்து வரி முறையை அறிமுகப்படுத்த இலங்கை தயாராகி வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள அண்மைய பணியாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் பரந்த வருவாய் திரட்டல் உத்தியின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த முயற்சி, வரி சமத்துவத்தை அதிகரிக்கும் மற்றும் பொதுத்துறை நிதியுதவியை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்து வரிவிதிப்புக்கு ஆதரவளிக்க தேவையான தரவு உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான விரிவான வரைபடத்தை IMF அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த முயற்சியின் மையமானது சொத்து மதிப்பீடுகளின் விரிவான மற்றும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தரவுத்தளத்தை உருவாக்குவதாகும்.
இது சொத்து மதிப்புகளை மதிப்பிடுவதற்கும் வரி பொறுப்புகளைக் கணக்கிடுவதற்கும் முதுகெலும்பாக செயல்படும்.
2027 ஆம் ஆண்டில் சொத்து வரி மூலம் அரசாங்கம் 56 பில்லியன் ரூபாவை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், 2028 ஆம் ஆண்டில் சொத்து வரி மூலம் எதிர்பார்க்கப்படும் வருவாய் 122 பில்லியன் ரூபாவாக இருக்கும்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவுக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில், விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) மூலம் ஆதரிக்கப்படும் பொருளாதார சீர்திருத்த திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
அந்தக் கடிதம், அரசாங்கம் தொடர்ந்தும் திட்ட நோக்கங்களுக்கு உறுதியுடன் இருப்பதாகக் எடுத்துரைக்கிறது.