81 கிலோ கஞ்சாப் பொதிகள் பண்டத்தரிப்பில் மீட்பு

பண்டத்தரிப்பு பகுதியில் கார் ஒன்றில் இருந்து 81 கிலோ 400 கிராம் கேரளக் கஞ்சாவினை இளவாலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் எடுத்து வரப்பட்ட நிலையில் இளவாலைப் பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து கொழும்புக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஞ்சுள தலைமையிலான 6பேர் கொண்ட விசேட குழுவினர் நேற்று மாலை 5.30 மணியளவில் குறித்த நபர்களை கைது செய்ததுடன் கஞ்சா பொதிகளையும் மீட்டுள்ளனர்.

கார் ஒன்றில் இருந்து 36 பொதிகள் மீட்கப்பட்டுய்யதுடன் யாழ்ப்பாணம் கச்சேரிவீதியைச் சேர்ந்த 31 வயது நபர் ஒருவரும் கல்வியங்காட்டைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காங்சேன்துறைப் பொலிஸ் பகுதியில் இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிலந்த ஜயவர்த்தன, ஏ.எஸ்.பி நந்தன ரணவீர உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து விசேட நடவடிக்கையினை மேற் கொண்டு வருகின்றோம்.

இங்கு களவு மற்றும் கசிப்பு விற்பனை மற்றும் உற்பத்தி என பல்வேறு குற்றச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இவை மக்கள் வழங்கும் தகவலின் அடிப்படையில் முடியடிக்கப்படுகின்றதுடன் கைதும் செய்யப்படுகின்றனர்.

இவ்வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 250 கிலோக்கிராம் கஞ்சாப் பொதிகள் இளவாலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

எனவே இன்று கஞ்சா பெரிய வியாபாரமாக போய்விட்டது. இவ்வாறானவற்றை முழுமையாக நிறுத்த வேண்டும் என்ற கொள்கையுடன் நாம் செயற்பட்டு வருகின்றோம்.

எனவே பொதுமக்கள் தகவல் வழங்கி எமக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.