Ad Widget

8 ஆவது நாளாக இடம்பெறும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள்!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று 8 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொக்கு தொடுவாய் மனித புதை குழி அகழ்வுப் பணிகள் கடந்த 6 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 7 ஆவது நாளான நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியின் போது 3 மனித எச்சங்கள் மீட்கப்பட்டதோடு, சைனைட் குப்பி ஒன்றும் விடுதலைப் புலிகளின் இலக்கத் தகடுகள் இரண்டும் கண்டெடுக்கப்பட்டன.

அந்தவகையில் இதுவரை 6 மனித எச்சங்கள் முழுமையாக அடையாளம் காணப்பட்டுள்ளன எனவும் குறித்த பகுதியில் அடுக்கடுக்காக சடலங்கள் காணப்படுவதால், அகழ்வு பணியின் கால வரையறை குறித்து உறுதியாகக் கூறமுடியாதுள்ளது எனவும் சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி வாசுதேவா, தடயவியல் பொலிஸார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் , தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம் தலைமையிலான குழுவினர் முன்னிலையில் இவ் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts