Ad Widget

67 தமிழ் அரசியல் கைதிகள் இவ்வார இறுதிக்குள் விடுதலை?

விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள 67 தமிழ் அரசியல் கைதிகளை இவ்வார இறுதிக்குள் விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, இதுவரை காலமும் வழக்குத்தாக்கல் செய்யப்படாமல் எவ்வித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளையே இந்த வாரம் விடுவிக்க ஏற்பாடாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஏனைய தமிழ் அரசியல் கைதிகள் குறித்தும் விசாரணையை துரிதப்படுத்தி, அவர்கள் சிறையில் இருந்த காலத்தை தண்டனை காலமாக கருதி, விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல வருட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து, நாடளாவிய ரீதியில் தமிழ் அரசியல் கைதிகள் கடந்த வாரம் உண்ணாவிரத போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இவர்கள் குறித்து எதிர்வரும் நவம்பர் மாத முதற்பகுதிக்குள் தீர்மானம் ஒன்றை எடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஜனாதிபதி வழங்கிய உறுதியையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.

கொழும்பு, அநுராதபுரம், பதுளை, யாழ்ப்பாணம் என நாடளாவிய ரீதியில் காணப்படும் சிறைகளில், சுமார் 200 இற்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts