Ad Widget

57வது அகவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு இன்று 57வது பிறந்த நாளை. முன்னிட்டு அமைச்சர் அவர்களுக்கு கட்சி உறுப்பினர்களினால் தெரிவிக்கப்பட்ட வாழ்த்துச் செய்திகள் சில..

KN-daklas

மக்கள் தலைவரின் மகத்தான வெற்றிகள் ! – முருகேசு சந்திரகுமார்

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு இன்று 57 ஆவது பிறந்தநாள். இதன் மறுபொருள் தமிழ் பேசும் மக்களுடைய மிகக் கடினமான அரசியற் பயணத்தில் வேறு எவரையும் விடக் கடினமான சவால்களைச் சந்தித்தவருடைய அரசியல் வெற்றியின் திருநாள் என்பதாகும்.

1977 ஆம் ஆண்டு தன்னுடைய 20 ஆவது வயதில் அரசியலில் ஈடுபடத்தொடங்கிய தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இதன் பின்னரான 37 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இடையறாது விடுதலைப் பணியையும் மக்கள் நேயத்தையும் தன்வாழ்வாகக் கொண்டிருந்தவர். தமிழ் பேசும் மக்களுடைய மிகக் கடினமான அரசியற் பயணத்தில் வேறு எவரையும் விடக் கடினமான சவால்களைச் சந்தித்தவர் தோழர் டக்ளஸ் தேவானந்தா. ஆனாலும் இன்றும் புத்திளமையோடு மக்களுக்குச் சேவையாற்றி வரும் அரசியற் போராளியாகவே அவர் செயற்படுகிறார்.

1977 ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டத்தில் ஈரோஸ் இயக்கத்தில் தன்னுடைய அரசியற் பயணத்தை ஆரம்பித்த தோழர் தேவானந்தா, பின்னர் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உருவாக்கத்தில் முக்கியமானவராகச் செயற்பட்டு, அதன் இராணுவ அமைப்பான மக்கள் விடுதலைப் படையின் தளபதியாக இருந்தார். நேர்மையும் தர்மமும் நிறைந்ததாக அந்தப் போராட்டத்தை வழிநடத்தினார். 1977 தொடக்கம் 1987 வரையான பத்து ஆண்டுகால ஆயுதப்போராட்டத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கும் பங்களிப்பும் மகத்தானவை.

1987 இல் இலங்கை இந்திய உடன்படிக்கையின் பின்னர் ஜனநாயக வழிமுறைக்குத் திரும்பிய தோழர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த 27 ஆண்டுகளாக சவால்களும் நெருக்கடியும் நிறைந்த ஒரு சூழலில் மக்களுக்கான பணிகளைச் செவ்வனே செய்து வருகிறார்.

இதேவேளை 1986 ஆம் ஆண்டிலிருந்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி என்ற ஜனநாயக வழி அரசியல் அமைப்பை உருவாக்கி, அதன் செயலாளராக இருந்து அதை வழிநடத்தியும் வருகிறார். இந்த அமைப்பு 1990 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் அதிபர் பொறுப்பிலிருந்த ஆர். பிரேமதாஸ, டி.பி விஜயதுங்க, சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஸ ஆகியோருடன் பொருத்தமான அரசியல் வழிமுறையைக் கடைப்பிடித்து யுத்தகால நெருக்கடி தொடக்கம் யுத்தம் முடிந்த பின்னான மீள் குடியேற்றம் வரையில் தமிழ்மக்களுக்கான பணிகளைச் செய்து வருகிறார். இலங்கை இந்திய உடன்படிக்கையின் பின்னான அரசியற் சூழலை விளங்கி, இலங்கைத்தீவின் அரசியல் யதார்த்தம் என்ன என்பதைப் புரிந்து கொண்டு, ஜனநாயக ரீதியில் இணக்க அரசியலை மேற்கொண்டு வரும் தோழர் தேவானந்தா அன்று கூறிய தீர்க்கதரிசனமாக கருத்துகளின் பின்னால் இப்பொழுது ஏனைய தமிழ்த்தலைவர்களும் அணிவகுக்கத் தொடங்கியிருக்கின்றனர். இது தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் மதிப்பீட்டிற்கும் தீர்க்கதரிசனப்பார்வைக்கும் கிடைத்த பெறுமதியாகும்.

1994 ஆம் ஆண்டு தொடக்கம் பாராளுமன்ற உறுப்பினராகவும் பின்னர் இலங்கை அரசின் சிரேஸ்ட அமைச்சராகவும் இருந்து, தமிழ்பேசும் மக்களுக்கு தோழர் டக்ளஸ் தேவானந்தா ஆற்றிய பங்களிப்பை இந்தக் காலகட்டத்தில் வேறு எந்தத் தலைவர்களும் ஆற்றவேயில்லை. எனினும் தமிழ்த்தேசியவாதத்தைப் பேசும் அரசியலாளர்கள் இந்தக் காலகட்டத்தில் பல நெருக்கடிகளை உண்டாக்கி, தோழர் டக்ளஸ் தேவானந்தாவிற்குச் சவால்களை ஏற்படுத்தினார்கள். எனினும் தன்னுடைய புத்திசாதுரியமான நடவடிக்கைகளாலும் கடினமான அர்ப்பணிப்பினாலும் அனைத்துச் சவால்களையும் முறியடித்து களத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் புத்திளம் பேராளியாகச் செயற்பட்டார். தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் சாதனைகளையும் அவருடைய பங்களிப்பையும் அவருடைய மனித நேயத்தையும் மக்கள் மீதான கரிசனையையும் ஒரு தலைவருக்குரிய மாண்பையும் அவரோடு நீண்டகாலமாக அருகிலிருந்து பழகியவன் என்ற ரீதியில் நான் நன்கறிவேன்.

1983 ஆம் ஆண்டிலிருந்து 2014 வரையான இன்றைய காலகட்டம் வரையில் நாம் பல விதமான அரசியற் பண்பு மாற்றங்களைச் சந்தித்து வந்த போதெல்லாம், அவற்றை தன்னுடைய மதிநுட்பத்தினாலும் தலைமைத்துவ ஆற்றலினாலும் வெற்றிகரமாக எதிர்கொண்டு முன்னேறியவர்.

இப்பொழுது பல தலைமைகள் புதிது புதிதாக வந்து மக்களுக்குப் பலவிதமான தோற்றங்களைக் காட்டலாம். ஆனால், கடந்த 35 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் தோழர் டக்ளஸ் தேவானந்தா அளவுக்கு எவரும் மக்களின் மனதில் இடம்பெறவில்லை. எதிர்தரப்பு அரசியல்வாதிகளின் உள்ளுணர்விலும் தோழருக்குத் தனியான மரியாதையும் மதிப்பும் உண்டு என்பதை நான் நன்கறிவேன். இத்தகைய சிறப்புகளும் மாண்பும் உடைய தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை அவரை நேசிக்கும் மக்களோடு இணைந்து வாழ்த்துகிறேன். அவருடைய மக்கள் பணிகள் மேலும் சிறக்கட்டும். அதனால் எங்கள் மண்ணும் எங்கள் தேசமும் வளம்பெறட்டும்.

தொடரட்டும் அவர் பணி. பரவட்டும் அவர் புகழும் சீரும் சிறப்பும்.

– முருகேசு சந்திரகுமார்
பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும்
இலங்கைப் பாராளுமன்றம்

வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகின்றேன் – ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் உதயன்

இன்று 57 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகின்றேன் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின் (உதயன்) தெரிவித்துள்ளார்.

தான்நேசிக்கும் மக்களின் அபிவிருத்திக்காக அரும்பாடுபடும் அமைச்சர் அவர்களின் பணிசிறக்க இந்த நாளில் மனதார வாழ்த்துகின்றேன்.

அரசியல் சாணக்கிய மதிநுட்பம் மூலம் அவரது அரசியல் பயணம் தொடர வாழ்த்துகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்பேசும் மக்களின் விடிவெள்ளிக்கு அகவை ஐம்பத்தேழு…

மரணதேவனும் மண்டியிட்ட மானிடனாய்…
ஏழை இதயங்களின் இருப்பிடம் ஆனவரே…

அலையென திரண்ட மக்கள் உங்கள் பின்னால்
மலையென எழும் காலம் கண்ணில் தெரிகிறது

சத்தியமாய் சொல்லுகிறேன் – உங்கள்
சாத்திய அரசியல் சாதகமாய் மாறும்

அகவை ஐம்பத்தேழா! ஐயமாய் இருக்கிறதே!
உங்கள் துடிப்பும் சுறுசுறுப்பும் இருபத்தேழாய் தான்
எனக்குத் தெரிகிறது

உங்கள் சுண்டுவிரல் தொட்டு கூட நடந்தவன் நான் –
பெருமைப்படுகின்றேன் தோழரே – நீங்கள்
வாழும் காலத்தில் நானும் வாழுகின்றேன்
என்று நினைக்கையில்

வாழ்க!
வாழ்க!!
இன்றுபோல் என்றும்
நலமாய் வாழ்க..

என்றும் தோழமையுடன்
வி.கே.ஜெகன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர்
யாழ்.மாவட்டம்

Related Posts