20 ஆயிரம் பட்டதாரிகளை இரண்டு கட்டங்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
“45 வயதுக்குட்பட்ட 20 ஆயிரம் பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைத்துக் கொள்வதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு ஆவணம் முன்வைத்தார். அதற்கு நேற்று (30) புதன்கிழமை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
5 ஆயிரம் பட்டதாரிகளை வரும் ஜூலை மாதத்திலும் 15 ஆயிரம் பட்டதாரிகளை வரும் செப்ரெம்பர் மாதத்திலும் இரண்டு கட்டங்களாக இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
2019ஆம் ஆண்டுவரை பயிற்சிக் காலக் கொடுப்பனவாக 20 ஆயிரம் ரூபா வழங்கப்படும். பயிற்சியை முழுமையாக நிறைவு செய்யும் அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படும்.” என்று தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு மேலும் தெரிவித்தது.