48 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பஸ் நடு வீதியில் தீப்பற்றி எரிந்து நாசம்

accidentஇலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று ஹப்புத்தளை விகாரகலை எனும் பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றி எரிந்ததில் மேற்படி பஸ் முற்றாக எரித்து நாசமானது. பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

வெல்லவாயவிலிருந்து 48 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போதே நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பஸ் தீப்பிடித்ததை சடுதியாக சாரதி பயணிகளுக்கு அறிவித்ததையடுத்து பயணிகள் அனைவரும் முட்டி மோதியவாறு கலவரமடைந்த நிலையில் பஸ்ஸிலிருந்து வெளியேறினர். இலங்கை போக்குவரத்துச் சபையின் வெல்லவாய டிப்போவுக்கு சொந்தமான என்.ஏ.3852 என்ற இலக்கத்தைக் கொண்ட பஸ் வண்டியே இவ்வாறு தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.

ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். நடு வீதியில் தீப்பற்றி எரிந்ததால் அங்கு பதற்ற நிலை காணப்பட்டதுடன் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.