4,000 அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சியும் பட்டமும்

e-jafffnaபயிற்சி படையணி தலைமையகத்தில் நடைபெறவுள்ள நேர்முகப் பரீட்சைக்கு 4000 அதிபர்கள் அழைக்கப்பட்டிருப்பது இந்த நாட்டின் பாடசாலைகளில் 50 சதவீதத்திலும் கூடுதலானவற்றை இராணுவமயப்படுத்தும் என்ற விசனத்தை தோற்றுவித்துள்ளது.

அதிபர் சேவை தரம் I., II ஐ சேர்ந்தவர்களும் அதிபர்களாக கடமை புரியும் கல்வி நிர்வாகச் சேவை உத்தியோகஸ்தர்களும் மார்ச் மாதம் 4ஆம் 5ஆம் 6ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நேர்முகப் பரீட்சைக்கு தோற்றுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பயிற்சி முடிந்த பின் இராணுவப் பட்டங்களான லெப்டினன், மேஜர், கப்டன் ஆகியன வழங்கப்படலாம் என பயிற்சி படையணியின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இந்த நடவடிக்கை மூலம் நாட்டின் அரைவாசிக்கு மேற்ப்பட்ட பாடசாலைகள் இராணுவ அதிகாரிகளினால் நிர்வகிக்கப்படும் என இதை எதிர்க்கும் இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோஸப் ஸ்ராலின் கூறினார்.

இதன் மூலம் பாடசாலை நிர்வாகத்தில் பாதுகாப்பு அமைச்சு தலையிடும். இதனால் இது பாடசாலை முறைமையின் சுதந்திரத்துக்கு பாரிய அடியாகும் எனவும் அவர் கூறினார்.

இதன் மூலம் அதிபர்கள் இராணுவ சேவைக்கு உள்வாங்கப்படுவர். இதனால் அரசியலில் ஈடுபடும் உரிமையை அவர்கள் இழந்துவிடுவர் எனவும் ஜோஸப் ஸ்ராலின் கூறினார்.

இதேவேளை, இராணுவ பயிற்சிப் பட்டங்களை பாடசாலை அதிபர்களுக்கு வழங்குவதால் பாடசாலைகளில் கட்டுப்பாடு முன்னேறும் என அரசாங்கம் நினைக்கின்றது. ஆனால் இராணுவச் சீருடையை அணிவது மட்டும் கட்டுப்பாட்டைப் பேண உதவ மாட்டாது என இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.