Ad Widget

30 வருட யுத்தம் நடந்த போதும் இறுதி 5 நாட்களும் என்ன நடந்தது என்றே கேள்வி எழுப்பப்படுகிறது! – ஜனாதிபதி

mahinda_rajapaksaமுப்பது வருடங்கள் யுத்தம் நடந்த போதும் இறுதி ஐந்து நாட்களில் என்ன நடந்தது என்ற கேள்வியே ஜெனீவாவில் எழுப்பப்படுகிறது. எனினும் இறுதி 5 நாட்களில் நடந்ததை முழு நாடும் அறியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தெரிவித்தார்.

நாம் நாட்டுக்காக எதைச் செய்த போதும் குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களுமே எஞ்சியுள்ளன என தெரிவித்த ஜனாதிபதி, மனித உரிமையை மதிப்பதில் நாம் அன்றும் இன்றும் முன்னணியிலுள்ளவர்கள் எனவும் தெரிவித்தார்.

அநுராதபுரம் நெடுஞ்சாலையை நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து அதனையொட்டிய மக்கள் பேரணிக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தேரிவித்ததாவது:

யுத்தம் முடிந்தாலும் இப்போது ஜெனீவாவில் எம்முடன் யுத்தம் ஆரம்பித்துள்ளது. இங்குள்ளவர்களும் சென்று சாட்சியமளிக்கின்றனர். நாம் எதைச் செய்த போதும் குற்றச்சாட்டுக்களே எமக்கு மீதமாகியுள்ளன.

முப்பது வருடங்கள் யுத்தம் தொடர்ந்த போதும் இறுதி ஐந்து நாட்களில் என்ன நடந்தது என்ற கேள்வியே ஜெனீவாவில் எழுப்பப்படுகிறது. இறுதி ஐந்து தினங்களில் என்ன நடந்தது என்பதை முழு நாடும் அறியும்.

எதிரிகள் எதிர் எதிரில் துப்பாக்கிகளுடன் சந்திக்க நேரும் போது முந்தியவர்கள் சுட நினைப்பர். யுத்தத்தின் இயல்பு அதுதான்.

அவர்கள் கூறுவது போல் பெருந்தொகையாக மரணமடையவில்லை.

பெருமளவிலானோர் மரணமடைந்து விட்டனர் என்று சொல்லப்பட்டாலும் அவர்கள் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

நாம் மனித உரிமை தொடர்பில் மிகவும் உயர் மட்டத்தில் கவனம் செலுத்துபவர்கள், மனித உரிமை மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகள் சம்பந்தமாக நாம் அன்று தொட்டு இன்று வரை முக்கியமளிப்பவர்கள். இப்போதும் அதனை மதிப்பவர்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாத்து வருபவர் நாம்.

முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து இனங்களுக்கிடையில் அன்னியோன்யத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தியுள்ளோம்.

சகல இன, மதங்களுக்கிடையிலும் நல்லுறவைக் கட்டியெழுப்பியுள்ளோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர்கள் அனுர பிரியதர்ஷன யாப்பா, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ். பி. நாவின்ன, டி. பி. ஏக்கநாயக்க உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related Posts