Ad Widget

3 வகையான குண்டுகளை படையினர் பயன்படுத்தினர், ரெப்பிடம் மன்னார் ஆயர் எடுத்துரைப்பு

முல்லைத்தீவு, புதுமாத்தளன் பிரதேசங்களில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரால் விமானக் குண்டுகள், கொத்தணிக் குண்டுகள் (கிளஸ்டர்) குண்டுகள் மற்றும் இரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டன’ என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே. ரெப் உள்ளிட்ட குழுவினரிடம் தான் தெரிவித்ததாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார்.

mannar-jaffna-ayar

‘படையினரால் பயன்படுத்தப்பட்ட இந்த மூன்று வகையான குண்டுத் தாக்குதல்கள் காரணமாகவே பெரும்பாலான பொதுமக்கள் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கொல்லப்பட்டனர்’ என்றும் சுட்டிக்காட்டியதாக அவர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை தொடர்பான உண்மை நிலையைக் கண்டறிவதற்காக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே. ரெப், இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்த இவர், யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் மற்றும் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் சிசனும் கலந்துகொண்டார். இதன்போதே மன்னார் மறைமாவட்ட ஆயரினால் மேற்படி கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட மன்னார் மறைமாவட்ட ஆயர், ‘இறுதிக்கட்ட யுத்தத்தின் போது குண்டுத் தாக்குதல்களால் காயமடைந்த மக்கள் புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன், கிளிநொச்சி போன்ற வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்களுக்கான உரிய மருத்துவ வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. அதற்கான அனுமதியினை பாதுகாப்பு தரப்பினர் வழங்கவில்லை’ என்றார்.

‘செம்மணி புதைகுழியில் 500க்கும் மேற்பட்டவர்கள் புதைக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் நீதிமன்ற அனுமதியுடன் அது தோண்டப்பட்ட போது மூன்று அல்லது நான்கு சடலங்கள் மட்டுமே இருந்தன. ஏனைய சடலங்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை’ என்று தான் சுட்டிக்காட்டியதாக தெரிவித்தார்.

‘காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி அதற்கான தீர்வினைப் விரைவில் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த ஆயர், யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூறுவதற்கான சுதந்திரம் இங்கு காணப்படுவதில்லை’

அத்துடன், ‘2008 ஜூன் மாதம் முதல் 2009 மே மாதம் வரையில் வடக்கிலிருந்த பொதுமக்களின் சனத்தொகையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இக்காலப் பகுதியிலிருந்த 146,000 பேர் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் எதுவும் இல்லை’ என்றும் அந்த குழுவினரிடம் சுட்டிகாட்டியதாக அவர் தெரிவித்தார்.

இராணுவம் மறுப்பு

மன்னார் ஆயரின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் றுவான் வணிகசூரிய இந்த வகையான குண்டுகளை தாம் ஒருபோதும் பயன்படுத்தியதில்லை என்றார்.

கொத்தணிக் குண்டுகள் (கிளஸ்டர்) குண்டுகள் மற்றும் இரசாயன குண்டுகளை பயன்படுத்துவதற்கான ஆயுதங்கள் எங்களிடம் இல்லை. விமானக் குண்டுத்தாக்குதல்களை நடத்தினோம். அதுவும், யுவிஎப்பினால் அங்கீகரிக்கப்பட்ட குண்டுகளையே பயங்கரவாதிகளில் சரியான இலக்குகளின் மீதே தாக்குதல்களை நடத்தினோம்.

இரசாயன குண்டுகளை புலிகளே பயன்படுத்தினர் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி

என்னை கொலை செய்வார்களோ தெரியவில்லை: மன்னார் ஆயர்

Related Posts