Ad Widget

3வது டெஸ்டிலேயே இரட்டை சதம் அடித்து அசத்திய கருண் நாயர்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி 477 ரன்கள் குவித்தது.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 199 ரன்கள் குவிக்க 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் குவித்திருந்தது.

கருண் நாயர் 71 ரன்னுடனும், முரளி விஜய் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முரளி விஜய் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து கருண் நாயர் உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக கருண் நாயர் அபாரமாக விளையாடினார். இதனால் 185 பந்துகளை சந்தித்து சதம் அடித்தார். மறுமுனையில் அஸ்வின் 116 பந்தில் அரைசதம் அடித்தார்.

முதல் சதத்தை அடித்த கருண் நாயர் அதை இரட்டை சதமாக மாற்ற முயற்சி செய்தார். அவரது முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. 167-வது ஓவரை ஜென்னிங்ஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி இரட்டை சதம் அடித்தார் கருண் நாயர். தன்னுடைய 3-வது போட்டியிலேயே முதல் சதத்தை இரட்டை சதமாக மாற்றி சாதனைப் படைத்தார்.

சற்று முன்வரை கருண் நாயர் ஆட்டமிழக்காது 261 ஒட்டங்களை பெற்றுள்ளதோடு இந்திய அணி 717 ஒட்டங்களைப் பெற்று இங்கிலாந்து அணியை விட 240 ஒட்டங்கள் முன்னிலை வகிக்கின்றது

Related Posts