2026/2027 கல்வியாண்டிற்கான தொழிற்கல்வி உயர்தர (Advanced Level Vocational Stream) – தரம் 12 சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, 2026/2027 கல்வியாண்டிற்கான தொழிற்கல்வி உயர்தரப் பிரிவு (Advanced Level Vocational Stream) தரம் 12 இற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை தற்போது கோரியுள்ளது.

2025 (2026) ஆம் ஆண்டு அல்லது அதற்கு முந்தைய 3 ஆண்டுகளுக்குள் க.பொ.த. (சாதாரண தரம்) பரீட்சைக்கு தோற்றிய எந்த மாணவரும், தமது பிரதேசத்தில் தொழிற்கல்வி உயர்தரப் பிரிவு நடைபெறும் பாடசாலையில் தரம் 12 இற்கு விண்ணப்பிக்கலாம். சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் கட்டாயமல்ல.

இந்தக் கல்வித் திட்டத்தின் மூலம் மாணவர்கள் தரம் 12 மற்றும் 13 வரை கல்வியைத் தொடர்ந்து கற்கும் வாய்ப்பைப் பெறுவதுடன், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய தொழிற்தகைமைச் சான்றிதழ் (NVQ Level 4) பெற்றுக்கொள்ளவும் முடியும்.

தரம் 12 இல் மாணவர்கள் மென்மைத் திறன்கள் (Soft Skills) மற்றும் பல்வேறு தொழில்துறைகளுக்கான அறிமுகப் பாடங்களைப் பயில்வார்கள். தரம் 13 இல், பாடசாலையின் பரிந்துரையின் அடிப்படையில் அரச தொழிற்பயிற்சி நிறுவனங்களில் தமக்குப் பொருத்தமான தொழில்துறையில் NVQ Level 4 பயிற்சிக்காக இணைக்கப்படுவார்கள். இந்தப் பயிற்சி தொழிற்பயிற்சி நிலையங்களிலும், பணியிடங்களிலும் வழங்கப்படும்.

பின்வரும் பல்வேறு துறைகளில் பயிற்சி பெறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது:

  • சுற்றுலா மற்றும் விருந்தோம்பல்
  • வாகன மற்றும் இயந்திர தொழில்நுட்பம்
  • தகவல் தொழில்நுட்பம்
  • சுகாதார மற்றும் பராமரிப்பு சேவைகள்
  • இரத்தின மற்றும் நகை தொழில்நுட்பம்
  • அழகுக்கலை
  • கலை மற்றும் கைவினை
  • உணவு உற்பத்தி
  • ஆடைத் தொழில்
  • மின்சார மற்றும் மின்னணு தொழில்நுட்பம்
  • உலோக வேலைப்பாடு
  • வெல்டிங்
  • இயந்திர இயக்கம்
  • கட்டுமானத் தொழில்
  • உள்துறை அலங்காரம்
  • தோட்டக்கலை
  • விவசாயம் மற்றும் தோட்டத் தொழில்
  • நீர்வள தொழில்நுட்பம்
  • விளையாட்டு, உயிர்காப்பு மற்றும் நீர்மூழ்கல்
  • விற்பனை மற்றும் தளவாட மேலாண்மை உள்ளிட்ட பல துறைகள்.

இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து பாடசாலை கல்வியையும் முடிக்கும் மாணவர்கள் NVQ Level 4 சான்றிதழைப் பெறுவார்கள். இதன் மூலம் வேலைவாய்ப்பு, உயர்கல்வி மற்றும் தொழில் முனைவுத் துறைகளில் பல்வேறு வாய்ப்புகளைப் பெற முடியும்.

விண்ணப்பப் படிவம், விண்ணப்பிக்கக்கூடிய பாடசாலைகளின் பட்டியல் மற்றும் தொழிற்பயிற்சி துறைகள் தொடர்பான விபரங்கள் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் சிறப்பு அறிவிப்புகள் பகுதியில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம், சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாவிட்டாலும் அனைத்து மாணவர்களுக்கும் 13 ஆண்டுகள் கல்வியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

விண்ணப்பங்கள் 2026 ஜூலை 8 ஆம் திகதிக்கு முன்னர், தொழிற்கல்வி உயர்தரப் பிரிவு உள்ள பாடசாலையின் அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் தகவல்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தை அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளமான www.moe.gov.lk மூலம் பெற்றுக்கொள்ளலாம். மேலும், அமைச்சின் Education for All Branch அல்லது www.facebook.com/VocationalStream/ என்ற உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தின் மூலமும் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

Related Posts