2025 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் அழியும்!

jaffna-map2025 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் அழியும் நிலை ஏற்படும். அதற்கு நீர்ப்பற்றாக் குறையே காரணமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார் யாழ். பல்கலைக்கழக விவசாயபீட சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.துஸ்யந்தினி மிகுந்தன்.யாழ்ப்பாணத்தின் காலநிலை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று யாழ்.அரச சார்பற்ற இணையங்களின் தலைவர் திருமதி சரோஜா சிவச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கிய போதே துஸ்யந்தினி மிகுந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் கூறும் போது,

“”மூன்றாம் உலகப் போர் நீரால் தான் ஏற்படப்போகிறது. நீர் பற்றாக்குறை அனைத்து நாடுகளிலும் இருக்கிறது. யாழ். மாவட்டதத்தில் தற்போது விவசாயத்தைப் பொறுத்தவரை நீர்ப் பற்றாக்குறை காணப்படுகிறது. மழை வீழ்ச்சி குறைந்து வருவதே அதற்கு காரணம். 2025 ஆம் ஆண்டில் நீர்ப்பற்றாக்குறை காரணமாக யாழ்ப்பாணம் அழிந்து போகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மழைவீழ்ச்சியை தேக்கி வைத்திருப்பதற்கு குடாநாட்டில் வழி இல்லை. காலநிலை மாற்றங்களால் உணவு உற்பத்தி குறைவடைந்து வறுமை ஏற்படும். வறுமை ஏற்படும் போது அதனை எதிர் கொள்ளக்கூடிய நிலையில் நாம் உள்ளோமா என்பது தான் அடுத்த கட்டப் பிரச்சினை. தற்போது இடம்பெறுகின்ற மணல் அகழ்வு , கற்பாறை அகழ்வு இவையெல்லாம் எதிர்காலத்தில் பெரும் அழிவைப் பெற்றத்தரப்போகின்றன.

உலகளாவிய ரீதியில் உணவுப்பற்றாக்குறையை ஈடுசெய்ய முடியும் எனும் நிலையில் இலங்கை 62 ஆவது இடத்திலும், இந்தியா 66 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 75 ஆவது இடத்திலும், நேபாளம் 79 ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 81 ஆவது இடத்திலும் இருக்கின்றன என்று 105 ஆசிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் உலகளாவிய நாடுகளில் ஆசியாதான் அதி கூடிய நீரைப் பயன்படுத்தும் கண்டம் என்றும் கூறப்படுகிறது. இந்த தரவுகளின் அடிப்படையில் இலங்கையில் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் நீர்ப்பற்றாக் குறை எவ்வாறு ஏற்படப் போகிறது என்பதை எம்மால் அறிய முடியும்” என்று தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Related Posts