2014ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் ?

2014ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடாத்த வாய்ப்பு உண்டு என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.நேற்று மாலை கண்டி கட்டுகஸ்தோட்டையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

கட்டுகஸ்தோட்டை மெனிககும்புர பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பதற்காகவும் ஸ்ரீல.சு.க. கிளையை ஆரம்பிப்பதற்காகவும் இக் கூட்டம் இடம்பெற்றது.

இங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க…

சுதந்திரத்திற்கு பின் எந்த ஒரு தலைவரையும் பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கு இடம் அளிக்கவில்லை. பண்டாநாயக்கா, டட்லி சேனாநாயக்கா, ஜே.ஆர். ஜயவர்தன, பிரேமதாச, விஜெதுங்க, சந்திரிக்கா ஆகிய என எந்த ஒரு தலைவரையும் பலகலைக்கழகங்களுக்கு செல்ல மாணவர்கள் அனுமதிக்கவில்லை. அவர்களுக்கு பல இன்னல்களை செய்தனர். ஈரியகொல்ல, வன்னிநாயக்க, ஹமீட், லலித் அத்துலத்முதலி போன்ற எந்த ஓர் உயர் கல்வி அமைச்சரையும் பல்கலைகழகங்களுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. கல்லடித்தனர், ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

ஆனால், நான் உயர் கல்வி அமைச்சர் என்ற முறையில் இந்நிலையை மாற்றினேன். பலமுறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பல்கலைக்கழகங்களுக்கு வரவழைத்தேன். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், விரிவுரையாளர்கள் பலரை இடை நிறுத்தினேன். இவ்வாறான மாற்றங்களை செய்ததன் காரணமாகவே இவ்வளவு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர். பல்கலைகழக ஆசிரியர்களது சம்பளம் பலமுறை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணம் உற்பட மூன்று மாகாணங்கள் டிசெம்பர் மாதம் கலைக்கப்பட்டு அடுத்த வருடம் ஆரம்பத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் ஆழும் கட்சி பாரிய வெற்றியை பெற்றுக்கொள்ளும். அதன் பின் 2013ஆம் ஆண்டில் நாட்டின் மற்றைய மாகாணங்களிலும் தேர்தல்களை நடாத்திய பின் 2014ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடாத்த வாய்ப்பு உண்டு என்றும் அமைச்சர் திஸாநாயக்க இங்கு மேலும் தெரிவித்தார்.