Ad Widget

20ஆவது திருத்தச் சட்டமூலம்: உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை வெளியிட்டாா் சபாநாயகா்!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தினை நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் சர்வஜன வாக்கெடுப்பு மூலமும் நிறைவேற்றுவது அவசியமென உச்ச நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்டமையை சபாநாயகா் கரு ஜயசூரிய இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

20ஆவது சட்டத் திருத்த சட்டமூலதத்திற்கு பெரும்பாலான மாகாண சபைகள் தங்களுடைய எதிா்ப்பை தெரிவித்திருந்த நிலையில் பல்வேறு தரப்பினா் இணைந்து அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றை நாடியிருந்தனா். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தினால் மேற்குறித்த பரிந்துரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தடவையில் நடத்தும் ஏற்பாடுகள் அடங்கிய 20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, மக்களின் தேர்தல் உரிமையை பறிப்பதாகவும், மாகாண சபைகளின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் குறித்த திருத்தச் சட்டம் அமைவதோடு, மாகாண அதிகாரங்களில் மத்திய அரசாங்கம் தலையிடும் வகையிலும் இத் திருத்தச் சட்டமூலம் அமைந்துள்ளதென தெரிவித்து, வடக்கு மாகாண சபை இத் திருத்தச் சட்டமூலத்தை நிராகரித்திருந்தது.

மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகள் திருத்தங்களை முன்வைத்ததோடு, குறித்த திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கப்படுமென தெரிவித்திருந்தன. குறிப்பாக, கூட்டமைப்பின் திருத்தங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்ததாக அண்மையில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, 20ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயாரென பிரதமர் ரணில் தெரிவித்திருந்த போதிலும், அதனை கைவிட்டு புதிய சட்டமொன்றை கொண்டுவரும் முனைப்பில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதெனவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts