Ad Widget

163 ஓட்டங்களால் இலங்கை வெற்றி

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியீட்டியுள்ள இலங்கை அணி, 3-0 என தொடரையும் கைப்பற்றியுள்ளது.

250195.3

கடந்த 13ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி துடுப்புடன் களமிறங்கிய அந்த அணிக்கு ஆரம்ப வீரர்களான குஷல் சில்வா (0), திமுத் கருணாரத்ன (7) அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

அத்துடன் தொடர்ந்து ஆடுகளம் வந்த குஷல் பெரேரா (16), குஷல் மென்டிஸ் (1), மெத்தியூஸ் (1) ஆகியோரும் அவ்வளவாக சோபிக்கவில்லை.

எனினும், பின்னர் ஜோடி சேர்ந்த தினேஸ் சந்திமால் (132 ஓட்டங்கள்) மற்றும் தனஞ்சயடி சில்வா (129) ஆகியோர் சதமடித்து அசத்தியதோடு, இலங்கையை வலுவான நிலைக்கு இட்டுச் சென்றனர்.

எதுஎவ்வாறு இருப்பினும், பின் வந்த வீரர்கள் எவரும் அரைச்சதம் கூட பெறமுடியாது அடுத்தடுத்து வௌியேற, இலங்கை அணி 355 ஓட்டங்களைப் பெற்ற வேளை சகல விக்கெட்டுக்களையும் இழந்து, தனது முதலாவது இன்னிங்சை நிறைவு செய்தது.

ஆஸி சார்பில் சிறப்பாக பந்து வீசிய மிச்சல் ஸ்ராக் 5 விக்கெட்டுக்களையும் நாதன் லயன் 3 விக்கெட்டுக்களையும் சாய்த்தனர்.

இதனையடுத்து, தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு, டேவிட் வோனர் 11 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொடுத்த நிலையில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

அடுத்ததாக களத்தில் இருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷான் மார்ஷ்சுடன் ஸ்டீவன் சுமித் கைகோர்த்தார்.

நிலைத்து ஆடிய இந்த ஜோடி இலங்கை பந்து வீச்சாளர்களை திணறடித்தது.

மார்ஷ் 130 ஓட்டங்களையும் ஸ்மித் 119 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க, இன்றைய மூன்றாம் நாளில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த ஆஸி. 379 ஓட்டங்களை குவித்துள்ளது.

இலங்கை சார்பில் அபாரமாக பந்து வீசிய ரங்கன ஹேரத் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி 24 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்க இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது.

அந்த அணி சார்பில் குஷல் சில்வா அதிக பட்சமாக 115 ஓட்டங்களை விளாசினார்.

இந்தநிலையில் போட்டியின் இறுதி நாளான இன்று 8 விக்கெட்டுக்களை இழந்து 347 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கை அணி, தனது இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு ஆட வாய்ப்பளித்துள்ளது.

இதனையடுத்து 324 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு டேவிட் வோனர் மாத்திரம் சிறப்பாக ஆடி 64 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

ஏனைய வீரர்கள் எவரும் அவ்வளவாக பிரகாசிக்காத நிலையில் சற்று முன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்த ஆஸி அணி 160 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளது.

இதன்படி 163 ஓட்டங்களால் இலங்கை வெற்றியீட்டியுள்ளது.

இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக பந்து வீசிய ரங்கன ஹேரத் 7 விக்கெட்டுக்களை சாய்த்துள்ளார்.

Related Posts