Ad Widget

அரசாங்கம் தனக்குத் தானே குழியைத் தோண்டியுள்ளது: சுமந்திரன் எம்.பி

Sumanthiran MPஏவல் படைகளை விட்டு வலி.வடக்கு மக்களின் ஜனநாயக போராட்டத்தைக் குழப்புவதன் மூலம் இந்த முட்டாள் தனமான அரசாங்கம், ஜெனீவாவில் தனக்குத் தானே குழி தோண்டியிருக்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமது சொந்த இடங்களை எங்களிடம் தாருங்கள் எனக் கேட்டு ஜனநாயக வழியில் போராடும் மக்களின் போராட்டத்தைக் குழப்புவது கீழ்த்தரமான செயல். அந்த கீழ்த்தரமான செயலை தனது படைகள் மூலம் செய்திருக்கிறது இந்த அரசாங்கம் எனவும் அவர் சாடினார்.

இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமது நிலங்களை தம்மிடம் கையளிக்க வலியுறுத்தி வலி. வடக்கு மக்கள் நேற்று நடத்திய ஜனநாயகப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இப்போராட்டத்தின்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

இத்தகைய மக்கள் போராட்டங்ளுக்கு மதிப்பளித்து இந்த அரசாங்கம் அவர்களுடைய நிலங்ககளை கையளித்து விலகிச் செல்லும் என முட்டாள்தனமாக நாங்கள் நம்பவில்லை.

அல்லது இன்றைய எதிர்க்கட்சி ஆட்சியமைத்தால் இதனைச் செய்யும் என்றும் நாங்கள் நம்பவில்லை. எங்களுடைய போராட்டத்தை சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டும். எங்கள் மக்கள் தமது உணர்வுகளை தொடர்ந்து உலகுக்குக் காட்ட வேண்டும். அதன் மூலம் ஏதோவொன்று சாத்தியமாகும்.

நாம் வெளிநாட்டு தூதர்களைச் சந்திக்கும் போது மீள்குடியேற்றம் குறித்து வலியுறுத்தும் போதெல்லாம் உங்கள் மக்கள் என்ன நினைக்கிறார்கள் எனக் கேட்கின்றனர். இவ்வாறான மக்கள் போராட்டங்கள் மூலம் தான் மக்கள் உணர்வுகள் வெளிப்படும். மக்கள் பிரதிநிதிகளாக நாங்கள் அவர்கள் உணர்வுகளைத் தான் பிரதிபலிக்கிறோம்.

ஜனநாயகப் போராட்டத்தை தனது அரச படைகள் மூலம் குழப்பும் செயலைச் செய்யும் இன்றைய ஜனாதிபதிதான் 1989 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் பெருமளவு இளைஞர்கள் படுகெலை செய்யப்பட்ட போது ஜெனிவா சென்று நீதி கோரினார்.

ஆனால் இன்று தனது ஆட்சியில் சர்வதேசத்தின் தலையீடு தேவையில்லை என்கிறார். நாம் இப்போது சர்வதேசத்தைக் கொண்டே சில காரியங்களைச் சாதிக்க வேண்டும். சர்வதேசத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக சிலவற்றைச் செய்ய வேண்டும்.

இன்று சர்வதேசம் இலங்கையின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வரவிருக்கிறது. இந்த வேகத்தை நாம் அதிகரிக்க வேண்டும்.

நல்லிணக்கம் என்று இந்த அரசாங்கம் பேசி வருவதெல்லாம் பொய். நல்லிணக்கம் பேசும் அரசு தனது படைகளுடாக வலி. வடக்கு மக்களின் சொந்த இடங்களை 33 வருடங்களுக்கு மேலாக ஆக்கிமித்து வைத்துள்ளது. இது பாதுகாப்பு சார்ந்த விடயம் அல்ல. இது எமது நிலம். எமது உரிமை அவற்றைப் பெறும் வரை நாம் ஓய்ந்து போகக் கூடாது.

எமது போராட்டத்தினூடாக தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு அரசைக் கொண்டுவர வேண்டும். அதற்காக இது போராட்டங்களைத் தொடர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும் எனவும் சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

Related Posts